தமிழக செய்திகள்

கட்டுவிரியன் பாம்பு கடித்து காங்கிரஸ் நகர தலைவர் பலி!

இச்சம்பவம் குறித்து கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தூத்துக்குடி,

கழுகுமலையில், பழைய இரும்பு கடையில் புகுந்த பாம்பு கடித்ததில், நகர காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்து வந்த மரியதங்கராஜ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை திருமாளிகை தெருவைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவரின் மகன் மரியதங்கராஜ் (52). இவர் கழுகுமலை - சங்கரன்கோவில் சாலையில், தீயணைப்பு நிலையம் அருகே பழைய பேப்பர் மற்றும் இரும்பு வியாபாரக் கடை நடத்தி வந்தார்.

நேற்று மாலை சுமார் 5 மணியளவில், கடையில் இருந்த மேஜைக்கு அடியில் கிடந்த பொருட்களை அவர் அடுக்கிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த பழைய சாக்கு மூட்டைகளுக்கு இடையே பதுங்கியிருந்த கட்டுவிரியன் பாம்பு, எதிர்பாராத விதமாக மரியதங்கராஜின் கையை பலமாக கடித்தது. வலியால் அவர் அலறவே, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டனர்.

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மரியதங்கராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். உயிரிழந்த மரியதங்கராஜிற்கு செல்லத்தாய் (47) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். நகர காங்கிரஸ் தலைவர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.