சென்னை
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில், டெல்லியில் நடைபெற்று வரும் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு திறன் தாக்க உச்சி மாநாட்டு அரங்கிற்குள் இளைஞர் காங்கிரஸ் அமைப்பை சேர்ந்த சிலர் மேலாடை இல்லாமல் அரை நிர்வாணமாக சென்று போராட்டம் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்தியாவையும், உலகையும் அடுத்த நூற்றாண்டுக்கு அழைத்து செல்வது எவ்வாறு? என்பது குறித்து விவாதிப்பதற்காக நடத்தப்படும் மாநாட்டில், நம் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பல நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி அழைத்து செல்வது போன்ற செயலில் ஈடுபட்டதன் மூலம் காங்கிரஸ் கட்சி எங்கு இருக்கிறது என்பதை உலகுக்கு காட்டியிருக்கிறது.
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்ப்பு தெரிவிக்க காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் உரிமை உண்டு. ஆனால், அந்த எதிர்ப்பு நாகரிகமாக வெளிப்படுத்தப்பட வேண்டும். உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களும், பிரான்ஸ் அதிபர் உள்ளிட்ட உலக அரசியல் தலைவர்களும் பங்கேற்ற, இந்தியாவுக்கு பெருமை சேர்க்க கூடிய ஒரு நிகழ்வில் காங்கிரஸ் கட்சியினர் இவ்வாறு நடந்து கொண்டிருப்பது அநாகரிகமான, காட்டுமிராண்டித்தனமான செயலாகும். அறிவும், முன்னேற வேண்டும் என்ற எண்ணமும் உள்ள எவரும் இப்படி ஒரு செயலை செய்ய மாட்டார்கள்.
உலகின் போற்றத்தக்க நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படும் டெல்லி செயற்கை நுண்ணறிவு திறன் தாக்க உச்சி மாநாட்டு அரங்கில் இப்படி ஒரு நாகரீகமற்ற செயலை அரங்கேற்றியதன் மூலம் தங்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அவப்பெயர் தேடி தந்திருக்கிறார்கள். இதற்கு காரணமானவர்கள் மீது காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுப்பதுடன், இதற்காக நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.