சென்னை
தி.மு.க. இளைஞர் அணியின் மாவட்ட மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் சில நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் முன்னாள் துணை-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, காங்கிரஸ் கட்சியை இனி எந்த காலத்திலும் சேர்க்க கூடாது. பதவி ஆசைக்காக ஒரு வார்த்தை கூட சொல்லாமல் சென்ற கட்சி காங்கிரஸ். கடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு தி.மு.க.வினரின் உழைப்புதான் காரணம். காங்கிரசுக்கு தமிழக மக்கள் நிச்சயம் பாடம் கற்று கொடுப்பார்கள் என பேசினார்.
இந்த நிலையில், மே 4-ல் என்ன நடந்தது? என்பது பற்றி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி., மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டியளித்து உள்ளார். அவர் சிவகாசியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, உதயநிதி ஸ்டாலின் அளந்து பேசியிருக்க வேண்டும்.
உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க தோளில் சுமந்த கட்சி காங்கிரஸ். அதற்கு காங்கிரஸ் உறுதுணையாக இருந்தது. அதனை மறந்ததே நன்றி மறந்து பேசுவது ஆகும். அவர், காங்கிரஸ் பற்றி பேசியது கண்டிக்கத்தக்கது. உதயநிதியின் வன்மம் வெளிப்பட்டு விட்டது என கூறினார்.
எல்லாவற்றிற்கும் முழுக்க முழுக்க காரணம் உதயநிதி ஸ்டாலின்தான். விஜய் முதல்வராக கூடாது என உதயநிதி ஸ்டாலின் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். அ.தி.மு.க.வுடன் சேர்ந்து அட்சியமைக்க வேண்டும் என தவ்வி குதித்தவர் உதயநிதி ஸ்டாலின். இதனை நீங்கள் சி.வி. சண்முகத்திடமே கேட்கலாம் என கூறினார்.