சென்னை,
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.பி. சி.வி. சண்முகம், மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்த நிலையில், காலியாக இருக்கும் இடத்துக்கு வருகிற 18-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ள தவெக நிறுத்தும் வேட்பாளரே தேர்தலில் வெற்றி பெறுவார். இந்த நிலையில் மாநிலங்களவை சீட்டை தங்களுக்கு தர வேண்டும் என்று கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் தவெகவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தவெக தலைவரும், முதல்-அமைச்சருமான ஜோசப் விஜய்யை இன்று நேரில் சந்தித்து காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வலியுறுத்தினார்.
இந்த நிலையில் மாநிலங்களவை சீட்டை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்குவதாக முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
இம்மாதம் 18-ம் தேதி தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ள மாநிலங்களவை (Rajya Sabha) உறுப்பினருக்கான தேர்தலில், தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் (Rajya Sabha Seat) இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.