சென்னை,
மறைந்த முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ராஜீவ் காந்தியின் 82-வது பிறந்தநாளையொட்டி சென்னை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் பின்வருமாறு:-
“தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வழிகாட்டுதலில் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி 2004 முதல் 2014 வரை இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்று மகத்தான சாதனைகளை புரிந்தது. இதற்காக வரலாற்றில் டாக்டர் மன்மோகன்சிங் என்றும் நினைவு கூரப்படுவார்.
2014 மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது நரேந்திர மோடி, வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள ரூபாய் 85 லட்சம் கோடி கறுப்புப் பணத்தை மீட்டு, ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் செலுத்துவோம், ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம், விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காகக் கூட்டுவோம், அனைத்துப் பொருட்களையும் இந்தியாவிலேயே தயாரிப்போம், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் அளிப்போம், விலைவாசியைக் குறைப்போம், எல்லோருக்கும் கழிப்பறை, எல்லோருக்கும் வீடு, எல்லோருக்கும் மின்சாரம், எல்லோருக்கும் சமையல் எரிவாயு இணைப்பு, நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றுவோம், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தை இரட்டை இலக்கில் நிலைநிறுத்துவோம், 2024 ஆம் ஆண்டிற்குள் இந்தியப் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் கோடி டாலராக உயர்த்துவோம், அனைத்து மாநில முதல்வர்களையும் பிரதமருக்கு இணையாக மதிப்போம், இட ஒதுக்கீட்டை உறுதி செய்து சமூகநீதியைக் காப்போம், அனைத்து மாநில மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிப்போம் என்ற பல வாக்குறுதிகளை வழங்கினார். தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சியில் அமர்ந்து, நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்று 12 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால், கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று பா.ஜ.க.வை கேட்க வேண்டிய இடத்தில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது.
நரேந்திர மோடி ஆட்சியில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் ஏழை,எளியவர்களின் நலனைப் புறக்கணித்து சில தொழிலதிபர்கள் பயனடைவதற்கே உதவியிருக்கின்றன. இதை அம்பலப்படுத்துகின்ற வகையில் பல அறிக்கைகள் வெளிவந்துள்ன. 2026ஆம் ஆண்டின் உலக சமத்துவமின்மை அறிக்கையின்படி, நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தில் 58 சதவீதத்தை மேல்மட்டத்தில் உள்ள 10 சதவீதத்தினர் பெற்று வருகின்றனர். கீழ்மட்டத்தில் உள்ள 50 சதவிகித மக்களுக்கு வெறும் 15 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது.
மேல்மட்டத்திலுள்ள 10 சதவீத கார்ப்பரேட்டுகள் நாட்டின் 65 சதவீத சொத்துகளை மோடி ஆட்சியில் குவித்துள்ளனர். இதில் உயர்மட்டத்தில் உள்ள ஒரு சதவிகித நபர்கள் மட்டும் 40 சதவீத சொத்துகளைத் தன்வசப்படுத்தியுள்ளனர். இந்தியாவில் தற்போதைய வருமான சமத்துவமின்மை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தை விட மோசமான நிலையில் உள்ளது. மேல்மட்டத்தில் உள்ள 10 சதவிகிதத்தினரின் வருமானத்திற்கும், கீழ்மட்டத்தில் உள்ள 50 சதவீதத்தினரின் வருமானத்திற்குமான இடைவெளி கடந்த 2014 முதல் 2024 வரை நிலையாக இருக்கிறது. இந்த வரலாறு காணாத சமத்துவமின்மை நரேந்திர மோடியின் ஆட்சி கார்ப்பரேட்டுகளின் காவலன் என்பதை உறுதி செய்கிறது. இந்த சொத்துக் குவிப்பை நம்பத்தகுந்த சர்வதேச ஆய்வு நிறுவனமான ஆக்ஸ்பார்ம் அறிக்கை உறுதி செய்திருக்கிறது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெறுகிறபோதெல்லாம் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்பது தென் மாநில மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்குத்தான் பயன்படும். 1971 ஆம் ஆண்டின் மக்கள் தொகை அடிப்படையில் 543 மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையே இன்னும் 25 ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டுமென்று அன்னை இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்தபோது, 1976-ல் அரசமைப்புச் சட்ட திருத்தத்தின் மூலம் தடுத்து நிறுத்தினார். 2002 ஆம் ஆண்டில் பிரதமர் வாஜ்பாய் இதே நிலையை 2026 வரை நீட்டிக்கிற வகையில் மீண்டும் திருத்தம் கொண்டு வந்து மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543 என்று தொடர உறுதி செய்தார்.
ஆனால், 2011 மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை உயர்த்த வேண்டுமென்று பா.ஜ.க. முயற்சி செய்வது, குடும்பக் கட்டுப்பாட்டின் மூலம் மக்கள் பெருக்கத்தைக் குறைத்த தென் மாநில மக்களை தண்டிக்கின்ற செயலாகும். எனவே, 1971 மக்கள் தொகை அடிப்படையில் இறுதி செய்யப்பட்ட 543 மக்களவைத் தொகுதிகளையும், அதில் மகளிருக்கான இடஒதுக்கீடு 33 சதவிகிதத்தையும் வழங்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் கொள்கையாகும். இதன்மூலம் அனைத்து மாநில மக்களையும் உள்ளடக்கி வேற்றுமையில் ஒற்றுமை காண்கிற கூட்டாட்சி முறையை உறுதி செய்ய முடியும் என்று இப்பொதுக்குழுக் கூட்டம் உறுதியாக நம்புகிறது.
விவசாயிகளின் விளை பொருட்களுக்கு டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவோம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதற்கு மாறாக, குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பறிக்கின்ற வகையில் 3 வேளாண் சட்டங்களை பா.ஜ.க. அரசு கொண்டு வந்தது. இதை எதிர்த்து தலைநகர் தில்லியில் கடும் குளிர், வெயிலைப் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராடி அந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வைக்கிற நிலையை ஏற்படுத்தினார்கள். பா.ஜ.க.வின் ஒரே நாடு, ஒரே சந்தையை விவசாயிகள் ஏற்கத் தயாராக இல்லை.
அதற்கு மாறாக, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப் பாதுகாப்பு என்ற கோரிக்கையை முன்வைத்தனர். ஆனால், அந்த கோரிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு இதுவரை நிறைவேற்ற முன்வரவில்லை. விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வதால் அவர்களுக்கு எந்தப் பயனும் ஏற்படாது என்று கூறுகிற ஒருவரை பிரதமராகப் பெற்றிருப்பதற்கு விவசாயிகள் வெட்கித் தலைகுனிய வேண்டும். நரேந்திர மோடியைப் போன்ற விவசாய விரோத எண்ணம் கொண்ட, கார்ப்பரேட் ஆதரவு பிரதமரை இந்தியா இதுவரை கண்டதில்லை.
தேர்தல் பரப்புரையில் கொடுத்த கறுப்புப் பணம் ஒழிப்பு குறித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதற்கு மாறாக, பொருளாதாரப் பேரழிவுக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி மேற்கொண்டார். ஆனால், செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளின் மொத்தத் தொகையில் 99 சதவிகிதம் வங்கிகளுக்குத் திரும்ப வந்து விட்டது. இதனால் கறுப்புப் பணம் ஒழியவில்லை.
எனவே, கறுப்புப் பணத்தை கார்ப்பரேட்டுகள் வெள்ளைப் பணமாக மாற்றிக் கொள்வதற்குத்தான் நரேந்திர மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை உதவியது. ஆயிரக்கணக்கான சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் 35 லட்சம் பேர் வேலையிழந்தனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூபாய் 2.25 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இது நரேந்திர மோடியால் நாட்டுக்கு ஏற்பட்ட பேரழிவுகளில் ஒன்றாகும்.
கார்ப்பரேட்டுகளுக்கு பல்வேறு சலுகைகளை செய்ததற்காக பாரதிய ஜனதா கட்சிக்கு தேர்தல் பத்திர நன்கொடை குவிந்துள்ளது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், தேர்தல் பத்திர நன்கொடை மூலமாக அரசியல் கட்சிகள் நிதி பெறுவது சட்டவிரோதம் என்று கடந்த பிப்ரவரி 2024-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஆனால், இந்தத் தீர்ப்பு வருவதற்கு முன்பாக 2018 முதல் 2024 வரை கார்ப்பரேட்டுகள் வழங்கிய மொத்த நன்கொடை ரூபாய் 16,518 கோடி. இதில் பா.ஜ.க. பெற்றது மட்டும் ரூபாய் 8252 கோடி. இது மொத்த நன்கொடையில் 50 சதவிகிதமாகும். இது ஊழல் இல்லை என்றால் வேறு எது ஊழல் என்பதை பா.ஜ.க. விளக்க வேண்டும்.
தன்னிச்சையாக செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் நரேந்திர மோடியின் கைப் பாவையாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சிறப்பு தீவிர திருத்தம் என்கிற பெயரில் பீகார் தேர்தலுக்கு முன்பாக 65 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது. இதை எதிர்த்து தலைவர் ராகுல்காந்தி வாக்காளர் உரிமைப் பேரணி நடத்தினார். ஆனாலும், சிறப்பு தீவிர திருத்தம் என்ற போர்வையில் வாக்காளர்களை நீக்கி வாக்கை திருடுகிற தேர்தல் ஆணையத்தின் போக்கு மாறவில்லை.
சமீபத்தில் மூன்றாவது கட்ட சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலமாக 16 மாநிலங்கள் 3 யூனியன் பிரதேசங்களில் ஒன்றரை கோடி வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளன. இத்தகைய தேர்தல் ஆணையத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கையின் காரணமாக தேர்தலில் சமநிலைத்தன்மை இல்லாமல் பா.ஜ.க.வுக்கு சாதகமாக செயல்படுகிற போக்கை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. இதை எதிர்த்து தொடர்ந்து போராடி உரிமைக்குரல் எழுப்பி வருகிற தலைவர் ராகுல்காந்தி அவர்களை இக்கூட்டம் மனதார பாராட்டுகிறது, போற்றுகிறது.
நீண்டகாலமாக நிலவி வந்த காவிரி பிரச்சினைக்கு முடிவு கட்டுகின்ற வகையில் 2007 இல் வெளிவந்த நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு, 2018 இல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி காவிரி நீர் பகிர்வு நடைபெற வேண்டும். ஆனால், இவற்றை மீறுகின்ற வகையில் காவிரி நீரை வழங்க கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
தமிழகம் பெற்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரிப் படுகை மாநிலங்களை பாதிக்கின்ற வகையில் எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் கர்நாடக அரசு மேற்கொள்ளக் கூடாது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், காவிரி நீரின் அளவை நிர்ணயிக்கும் தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள பிலிண்குடுலுவிற்கு 4 கி.மீ. தூரத்திற்கு மேலே கிருஷ்ணராஜசாகர் அணைக்கு கீழே கட்டுப்படுத்தப்படாத மழை நீரின் மூலம் தமிழகத்திற்கு மட்டுமே கிடைக்கக் கூடிய 80 டி.எம்.சி. நீரை அபகரிக்கும் நோக்கத்துடன் ரூபாய் 9000 கோடி செலவில் 67.15 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணையை மேகதாதுவில் கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்வதை தமிழ்நாடு எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ளாது. மேகதாதுவில் அணை கட்டப்படுமேயானால், காவிரிப் படுகை வறண்ட பாலைவனமாக மாற வழிகோலும் என தமிழகமே ஒட்டுமொத்த எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதியளித்தது. இது பா.ஜ.க. அரசின் தமிழக விரோதப் போக்கை உறுதிப்படுத்துகிறது. கர்நாடகத்தில் யார் ஆட்சி செய்தாலும் அவர்கள் எல்லோருமே தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராகவேதான் கடந்த காலங்களில் செயல்பட்டிருக்கிறார்கள். காவிரி நீரின் உரிமையை நிலைநாட்டவும், மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்கவும் தமிழக அரசு எடுக்கின்ற அனைத்து முயற்சிகளுக்கும் துணை நிற்போம் என்று இப்பொதுக்குழு உறுதி கூறுகிறது.
மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிப்போம் என்று வாக்குறுதி வழங்கிய நரேந்திர மோடி ஆட்சியில் உரிமைகள் பறிக்கப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது. மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் ஒற்றை ஆட்சிமுறை நடைமுறைக்கு வந்தது. மத்திய அரசின் அதிகாரங்கள் அனைத்தும் பிரதமர் அலுவலகத்தில் குவிக்கப்பட்டன. மாநில உரிமைகளைப் பறிக்கின்ற வகையில் ஜி.எஸ்.டி., திட்டக்குழு கலைப்பு, புதிய கல்விக் கொள்கை, மாநில மொழிகளுக்கான நிதிக் குறைப்பு நடவடிக்கைகள் போன்றவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அனைத்து மொழிகளையும் சமமாகக் கருத வேண்டிய ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் புதிய கல்விக் கொள்கையின் மூலம் மும்மொழித் திட்டம் திணிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூபாய் 2952 கோடியை விடுவிக்க ஒன்றிய பா.ஜ.க.வின் கல்வியமைச்சர் தயாராக இல்லை. இத்திட்டத்தின் கீழ் பணியாற்றுகிற ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சுமார் 20 ஆயிரம் பேருக்கு ஊதியம் வழங்க முடியாமல் தமிழக அரசே அந்த நிதிச்சுமையை ஏற்று வருகிறது.
அன்னை சோனியா காந்தியின் வழிகாட்டுதலின்படி, டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் செயல்பட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், 2004 இல் தமிழுக்கு செம்மொழித் தகுதி வழங்கப்பட்டது. 2017 முதல் 2025 வரை சமஸ்கிருத மொழிக்கு ரூபாய் 2532 கோடியும், செம்மொழித் தகுதி பெற்ற தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளுக்கும் சேர்த்து ரூபாய் 147.56 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையை விட சமஸ்கிருத மொழிக்கு 17 மடங்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. சமஸ்கிருத மொழியை இந்தியாவில் பேசுபவர்கள் மொத்தம் 14,000 பேர் தான். பா.ஜ.க.வின் மொழிக் கொள்கை என்பது இந்தி மொழியோடு சமஸ்கிருதத்தையும் திணிப்பதுதான்.
கடந்த 12 ஆண்டுகளில் வெள்ளம், வறட்சி நிவாரண நிதியாக தமிழக முதலமைச்சர்கள் ஒன்றிய அரசிடம் கேட்ட மொத்தத் தொகை ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரத்து 500 கோடி. ஆனால், பிரதமர் மோடி வழங்கியதோ ரூபாய் 5778 கோடி. கேட்ட தொகையில் 5 சதவிகிதத்தைக் கூட தர மறுத்த நரேந்திர மோடி தமிழகத்தை வஞ்சித்ததற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. அதனால்தான் தமிழக மக்கள் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியை வெறுத்து ஒதுக்கினார்கள்.
கடந்த 60 ஆண்டுகளாக திராவிட இயக்கங்களோடு கூட்டணி வைத்து அவர்கள் ஆட்சி அமைத்ததில் காங்கிரஸ் கட்சி பெரும் பங்காற்றியிருக்கிறது. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் எந்த வகையிலும் பங்கு கொடுப்பதற்கு திராவிட இயக்கங்கள் தயாராக இருந்ததில்லை. இந்நிலையில் திராவிட இயக்கங்களின் புரையோடிப் போன ஊழலாட்சிக்கு முடிவு கட்டுகின்ற வகையில் த.வெ.க. தலைவர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் எடுத்த முயற்சிக்கு 27 மாதங்களில் பலன் கிடைத்து தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை லட்சோபலட்சம் காங்கிரஸ் கட்சியினர் சார்பாக நெஞ்சார இக்கூட்டம் வரவேற்கிறது.
தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்டு த.வெ.க. ஆட்சியில் ஊழலுக்கு எந்தவகையிலும் இடமில்லை என்கிற நோக்கத்தோடு, வெளிப்படைத்தன்மையுடன் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதன்மூலம் பெருந்தலைவர் காமராஜர் கண்ட கனவு நிறைவேறியிருக்கிறது. இதைக் கொண்டாடுகிற வகையில் தான் ‘லஞ்சம் தவிர் - நெஞ்சம் நிமிர்” என்கிற இயக்கத்தை காமராஜர் பிறந்தநாளில் தமிழகமெங்கும் காங்கிரஸ் கட்சி பரப்புரை மேற்கொண்டதை இக்கூட்டம் குறிப்பிட விரும்புகிறது.
மத்தியில் நடைபெற்று வரும் நரேந்திர மோடி ஆட்சியில் நிகழும் மக்கள் விரோதச் செயல்களுக்கு எதிராக மக்களவையிலும், மக்கள் மன்றத்திலும் நாள்தோறும் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் தமது கடுமையான உழைப்பின் மூலம் எதிர்ப்பைவெளிப்படுத்தி வருகிறார். நரேந்திர மோடியை எதிர்க்கின்ற பேராண்மைமிக்க அரசியல் தலைவராக ராகுல்காந்தி திகழ்ந்து வருகிறார். 140 கோடி மக்களின் ஒற்றைக் குரலாக அவர் ஒலித்து வருகிறார். தலைநகர் டெல்லியில் மாணவர்கள் நிகழ்த்திய பேரணியை சகித்துக் கொள்ள முடியாத ஒன்றிய பா.ஜ.க. அரசு அடக்குமுறையை ஏவிவிட்டு கடுமையான தாக்குதலை நடத்தியது. இத்தகைய தாக்குதலை நடத்துவதற்கு உத்தரவிட்டவர்கள் யார் என்ற தலைவர் ராகுல்காந்தியின் கேள்விக்கு இதுவரை பதில் சொல்ல பா.ஜ.க. அரசு தயாராக இல்லை.
இந்நிலையில், 2029 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் காங்கிரஸ் பங்கேற்கிற கூட்டணி வெற்றி பெறுகின்ற வகையில், காங்கிரஸ் கட்சியினர் ஒரே இலக்குடன் பணியாற்ற வேண்டுமென்று இப்பொதுக்குழு கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தலைவர் ராகுல்காந்தி அவர்களின் தலைமையை தமிழ்நாட்டில் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சென்று அவரது கருத்துகளைப் பரப்பி, மக்கள் ஆதரவைப் பெறுவதன் மூலமே நமது நோக்கத்தை அடைய முடியும். இத்தகைய கடுமையான இயக்கப் பணிகளின் மூலமே 2029 தேர்தலுக்குப் பிறகு தலைவர் ராகுல்காந்தி அவர்களை பிரதமராக்குகிற முயற்சியில் தமிழ்நாடு பங்களிக்க முடியும்.
தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு த.வெ.க. தலைவர் திரு. சி.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் அமைந்த, திராவிட இயக்கங்கள் அல்லாத ஆட்சியில் பங்கேற்க வேண்டுமென காங்கிரஸ் கட்சிக்கு அவர் மிகுந்த விருப்பத்தோடு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை காங்கிரஸ் தலைமை ஏற்றுக்கொண்டு, இன்றைக்கு இரு அமைச்சர்கள் ஆட்சியில் பங்கு வகித்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டையில் நமது அமைச்சர்களை சந்திப்பதைவிட வேறு மகிழ்ச்சி காங்கிரஸ் கட்சியினருக்கு இருக்க முடியாது.
கடந்த 60 ஆண்டுகளாக திராவிட இயக்கங்களோடு மாறி மாறிக் கூட்டணி வைத்து அவர்களை ஆட்சியில் அமர வைத்தபிறகும், காங்கிரஸ் கட்சிக்கு எந்த பங்கையும் அவர்கள் வழங்கியதில்லை. திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்கள், தாங்கள் ஆட்சி அமைத்த பிறகு, கூட்டணிக் கட்சியினரோடு இணைந்து பணியாற்றத் தயாராக இல்லாததற்குக் காரணம், அவர்களிடம் ஜனநாயக உணர்வோ, வெளிப்படைத் தன்மையோ இல்லாமல் இருந்ததுதான். அதனால்தான் திராவிட இயக்கங்கள் கடந்த தேர்தலில் படுதோல்வி அடைகிற நிலை ஏற்பட்டது.
தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி தனது கொள்கைகளைப் பறைசாற்றுவதன் மூலம் தனித்தன்மையோடு இயங்கி, நமக்கான கருத்தியலை முன்வைத்து தனித்துவமான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று இந்தப் பொதுக்குழு கூட்டம் வலியுறுத்துகிறது. இந்த நோக்கத்தை அடைவதன் மூலமே தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்திட பெருந்தலைவர் காமராஜர், பாரத ரத்னா ராஜீவ்காந்தி ஆகியோர் கண்ட கனவை நனவாக்கிட சூளுரை மேற்கொண்டு, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வழிகாட்டுதலின்படி கண்துஞ்சாது, அயராது பாடுபடுவோம் என இப்பொதுக்குழுக் கூட்டத்தில் உறுதியேற்போம்.”
மேற்கண்ட தீர்மானங்கள் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.