தமிழக செய்திகள்

தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து காங்கிரஸ் கட்சி இன்று முடிவு

கவர்னர் நிர்ணயிக்கும் காலக்கெடுவுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை விஜய் நிரூபிக்க வேண்டும்.

சென்னை,

தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு கட்சி ஆட்சி அமைக்க குறைந்தது 118 தொகுதிகள் அவசியம். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் த.வெ.க. அதிகபட்சமாக 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இருந்தாலும், தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் த.வெ.க.வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பார்.

அதன்படி, விஜய் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று, கவர்னர் நிர்ணயிக்கும் காலக்கெடுவுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆனால் 108 என்ற எண்ணிக்கையுடன் அதைச் சாத்தியப்படுத்துவது கடினம். மேலும், சட்டசபையில் த.வெ.க.வைச் சேர்ந்த ஒருவர் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டு, அவரின் மூலம் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து பெரும்பான்மை வாக்கெடுப்பும் நடைபெறும்.

இதில் சபாநாயகருக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது. மேலும், த.வெ.க. தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், ஒன்றை மட்டும் வைத்துக்கொள்ள முடியும்; இதனால் ஒரு தொகுதியை த.வெ.க. இழக்கும். எனவே த.வெ.க.வுக்கு சட்டசபையில் 106 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருக்கும். பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களுக்கு இன்னும் 12 இடங்கள் தேவைப்படும்.

தனித்து போட்டியிட்டதால் த.வெ.க.வுக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லை. எனவே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆதரவளித்தால் மட்டுமே ஆட்சியில் நீடிக்க முடியும். த.வெ.க. வெளிப்படையாக எந்த கட்சியிடமும் ஆதரவு கோரவில்லை என்றாலும், பின்னணியில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

தற்போதைய அரசியல் நிலவரப்படி, தி.மு.க. கூட்டணியில் இருந்து வெற்றி பெற்று 5 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட காங்கிரஸ், த.வெ.க.வுக்கு ஆதரவு தர வாய்ப்பு அதிகம். ஏனெனில் காங்கிரசின் ஒரு பிரிவு முன்பே த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க விரும்பியது. ஆனால் அது நடக்கவில்லை. மேலும் த.வெ.க. வெற்றிக்குப்பின் ராகுல் காந்தி, விஜய்க்கு தொலை பேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஆட்சி அமைக்க காங்கிரசிடம் தவெக தலைவர் விஜய் ஆதரவு கோரிய நிலையில் சென்னையில் இன்று காலை தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. மாநில மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து மாநில காங்கிரஸ் கமிட்டியே முடிவு செய்ய வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.