தமிழக செய்திகள்

திருமாவளவன், டி.ராஜாவுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு

தவெகவிற்கு ஆதரவு அளிக்குமாறு திருமாவளவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா ஆகியோருடன் கார்கே கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால், திமுக கூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவு கோரியுள்ளது. விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்க உள்ளன.திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சியாக செயல்படுவதில்தான் விருப்பம் எனத் தெரிவித்திருக்கும் நிலையில், திமுகவின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்கும் முனைப்பில் அதிமுக பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக விசிக, இடதுசாரிகள் தனித்தனியாக அவர்களது கட்சி செயற்குழுக் கூட்டங்களில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். மறுபுறம், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் ஆலோசனை செய்து வருகிறார். கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று மாலை தங்கள் முடிவை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விசிக நாளை காலை தங்கள் நிலைப்பாட்டை அறிவிப்பதாக கூறியுள்ளது. இந்த மூன்று கட்சிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ள நிலையில், விசிக தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா ஆகியோருடன் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். விஜய்யின் தவெகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று இந்த பேச்சுவார்த்தையின் போது வலியுறுத்தியுள்ளார்.