சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், மற்ற கட்சிகள் த.வெ.க.வுக்கு இன்னும் ஆதரவு கொடுக்கவில்லை.
இதனிடையே, காங்கிரஸ் கட்சி த.வெ.க.வுடன் இணைந்ததை தி.மு.க.வினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் அலிம் அல் புஹாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
த.வெ.க.வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான காங்கிரஸ் கட்சியின் முடிவு குறித்து பொதுவெளியில் விமர்சித்து பேசியதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தொடர் எச்சரிக்கைகளுக்கு பிறகும் கட்சியின் ஒழுக்க நெறிமுறைகள் மற்றும் அமைப்பு விதிகளை மீறி அலிம் அல் புஹாரி செயல்பட்டு வந்தார் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, இது தொடர்பான விசாரணை நடைபெற உள்ளதாகவும், அடுத்த உத்தரவு வரும் வரை காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அலிம் அல் புஹாரி சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.