தமிழக செய்திகள்

சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்

இந்தியாவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு உண்டாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

உலகம் முழுவதும் மார்ச் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், அந்த நாளில் பெண்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் அறிவிப்புகள் வரும் என்ற எதிர்ப்பார்ப்பு கானல் நீராகிற வகையில் கசப்பான செய்தி வந்தது. வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூபாய் 60 உயர்த்தப்பட்டது. அதாவது, ரூபாய் 868.50 ஆக இருந்த சிலிண்டர் விலை ரூபாய் 928.50 ஆக உயர்ந்துள்ளது. இதனால் குடும்ப செலவில் கூடுதல் சுமை ஏற்பட்டிருக்கிறது.

ஏற்கனவே பொருளாதார பாதிப்பு காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. மக்களுக்கு வாங்கும் சக்தி குறைந்த நிலையில், பொருட்களின் விலை உயர்வினால் சராசரி மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், டீக்கடைகள், ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையும் ரூபாய் 1,14.50 உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று சிலிண்டர் விலை ரூபாய் 2,043.50 ஆக உயர்ந்து, முதல்முறையாக ரூபாய் 2,000-த்தை தாண்டியிருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்களின் அன்றாடப் பயன்பாட்டில் உள்ள டீ, காபி போன்ற பானங்களின் விலை உயர்வதற்கான வழி ஏற்பட்டிருக்கிறது. தற்போது எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பின்படி, ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்கள் 21 நாட்கள் கழித்தும், 2 சிலிண்டர் வைத்திருப்பவர்கள் 30 நாட்கள் கழித்தும் தான் புதிய சிலிண்டருக்கு பதிவு செய்ய முடியும்.

கச்சா எண்ணெய் இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டு, இந்தியாவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு உண்டாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், நரேந்திர மோடியின் தவறான வெளிநாட்டுக் கொள்கை காரணமாக அமெரிக்க - இஸ்ரேல் ஆதரவு போக்கு இஸ்லாமிய நாடுகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் கேடு ஏற்படுகிற நிலை உருவாகியுள்ளது.

மத்திய பா.ஜ.க. அரசின் தவறான வெளிநாட்டுக் கொள்கையின் காரணமாக, குடும்பப் பெண்களின் பயன்பாட்டில் உள்ள கேஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டிருப்பதை கண்டித்து, தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவி எம். ஹசீனா சையத் ஒருங்கிணைப்பில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மகளிர் காங்கிரஸ் சார்பில், நாளை (10.3.2026) கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.