சென்னை,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கடந்த மாதம் 17-ந் தேதி நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் கடும் நெரிசல் ஏற்பட்டது. அப்போது தங்கள் கட்சித் தலைவர் திருமாவளவனை கொல்ல சதி நடந்ததாக வி.சி.க. சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த வக்கீல்கள் ராஜேந்திரன், நெப்போலியன் ஆகியோர் உளுந்தூர்பேட்டை சம்பவத்தைச் சுட்டிக்காட்டி திருமாவளவனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு மற்றும் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கவும், உளுந்தூர்பேட்டை மாநாட்டில் பாதுகாப்புக் குறைபாடு குறித்து உரிய விசாரணை நடத்தவும் உத்தரவிட வேண்டும் என சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர்கள் ஆனந்தராஜா, இளஞ்செழியன் ஆகியோர், இந்த புகார் தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு உரிய விசாரணை மேற்கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.