தமிழக செய்திகள்

திமுக-காங்கிரஸ் இடையே நாளை காலை 10 மணிக்கு தொகுதி உடன்பாடு - தினேஷ் குண்டுராவ் அறிவிப்பு

திமுக-காங்கிரஸ் இடையே நாளை காலை 10 மணிக்கு தொகுதி உடன்பாடு எட்டப்படும் என தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அறிவித்துள்ளார்.

சென்னை,

சட்டமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு செய்வது குறித்து இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலின் இல்லத்தில் காங்கிரஸ் மற்றும் திமுகவினர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 24 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய தினேஷ் குண்டுராவ், தொகுதி பங்கீடு குறித்து திமுக-காங்கிரஸ் இடையே நாளை காலை 10 மணிக்கு உடன்பாடு எட்டப்படும் என்று தெரிவித்தார். இதன் மூலம் இரு தரப்பினருக்கும் இடையில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டு நாளை முறைப்படி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.