தமிழக செய்திகள்

தொகுதி பங்கீடு: கூடுதலாக இடங்களை ஒதுக்க வலியுறுத்தியுள்ளோம் - சிபிஎம் மாநில செயலாளர்

சென்னை அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன், தி.மு.க. இன்று மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை நடத்தியது.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே, தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் பிரசாரம், கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ஆளும் தி.மு.க. 26 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது.

தி.மு.க. கூட்டணியில் இதுவரை காங்கிரஸ் (28), மதிமுக (4), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2), மனிதநேய மக்கள் கட்சி (2), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (2) ஆகிய 5 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது. எஞ்சிய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தி.மு.க. தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னை அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன், திமுக மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை நடத்தியது. அப்போது திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று சிபிஎம் சார்பில் வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து பேச்சுவார்த்தைக்குப்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், “தி.மு.க. உடன் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி இல்லை. 2021ல் போட்டி போட்டதை விட அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளோம். அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படும். காங்கிரசுக்கு அதிக இடங்கள் கொடுத்ததில் ஆட்சேபனை இல்லை. எங்களது பலத்திற்கு ஏற்ப இடங்களை ஒதுக்க வலியுறுத்தியுள்ளோம்” என்று கூறினார்.