சென்னை,
தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக நீதியரசர் குரியன் ஜோசப் ஆணையத்தின் பரிந்துரைகளை முதலில் வலியுறுத்த வேண்டும் என்றும், மாநில உரிமைகளைப் பாதுகாப்பதில் திமுகவின் உறுதிப்பாட்டை நிரூபிக்க வேண்டிய தருணம் இது என்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இன்று திமுக தலைவர் மு க ஸ்டாலின், தொகுதி மறுவறை குறித்து நடத்திய கலந்தாலோசனை கூட்டத்திற்கு பிறகு எனது தலைமையில் காணொலி வாயிலாக கட்சியின் தலைமை நிர்வாக குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொகுதி மறுவரையறை குறித்த திமுகவின் நிலைப்பாடு விரிவாக விவாதிக்கப்பட்டது. இதன் இறுதியில் பின்வரும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது:
தொகுதி மறுவறை குறித்து திமுக தலைவர் தோழமை கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடியது பாராட்டதக்க நடைமுறையென இந்நிர்வாக குழு கருதுகிறது.
தொகுதி மறுவரையறை என்பது வெறும் தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றுவதற்கான நிர்வாக நடவடிக்கை அல்ல. அது இந்தியாவின் கூட்டாட்சிக் கட்டமைப்பு, மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம், நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் குரல் மற்றும் மாநில உரிமைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய மிக முக்கியமான அரசமைப்புச் சட்டப் பிரச்சினையாகும்.
குறிப்பாக, இப்பிரச்சினையை வெறும் அரசியல் செயல்பாடாக அணுகாமல், மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்ட உத்தரவாதங்களுடன் அணுக வேண்டியது அவசியம்.
இந்தச் சூழலில், கடந்த திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையிலான உயர்நிலைக் குழு அளித்துள்ள பரிந்துரைகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. அக்குழு, தொகுதி மறுவரையறை தொடர்பாக இரண்டு அடிப்படையான அரசமைப்புச் சட்டத் திருத்தங்களைப் பரிந்துரைத்துள்ளது.
முதலாவதாக, தொகுதி மறுவரையறை ஆணையங்களின் பரிந்துரைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களின் கட்டாய ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக அரசமைப்புச் சட்ட மற்றும் அதிகார வரம்பு தொடர்பான காரணங்களுக்காக நீதித்துறை மறுஆய்வுக்கும் வழிவகை செய்யப்பட வேண்டும். இதற்காக அரசமைப்புச் சட்டத்தின் 82, 170 மற்றும் 329A பிரிவுகளில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதுவரை நாடாளுமன்றம் இயற்றும் எந்தவொரு தொகுதி மறுவரையறைச் சட்டத்திலும் கட்டாயமான சட்டமன்ற ஆய்வுக்கு வழிவகை செய்யப்பட வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது.
இரண்டாவதாக, நாடாளுமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்வதற்கு ஒன்றிய அளவில் தனி ஆணையமும், மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்வதற்குத் தனித்தனி மாநில ஆணையங்களும் அமைக்கப்பட வேண்டும். இதற்காக அரசமைப்புச் சட்டத்தின் 82, 170, 327 பிரிவுகள் மற்றும் ஏழாவது அட்டவணையின் ஒன்றியப் பட்டியல் 72, மாநிலப் பட்டியல் 37 ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த ஆணையங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவமும், தேர்தல் குழு அடிப்படையிலான நியமன முறையும் அரசமைப்புச் சட்டத்தால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களின் உரிமைகளையும் கூட்டாட்சித் தத்துவத்தையும் பாதுகாப்பதற்கான இந்தப் பரிந்துரைகளை திமுக முதலில் வலியுறுத்த வேண்டும் என்று இந்நிர்வாக குழு கருதுகிறது.
மாநில சுயாட்சி, கூட்டாட்சித் தத்துவம், மாநில உரிமைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து தனது அரசியல் கொள்கைகளாக முன்னிறுத்தி வரும் திமுக, இத்தகைய முக்கியமான தருணத்தில் அவற்றைச் செயல்படுத்திக் காட்ட வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளது.
எனவே, குரியன் ஜோசப் ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு அரசமைப்புச் சட்ட உத்தரவாதம் அளிக்காமல், தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்களுக்கு திமுக ஆதரவளிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறோம்.
முன்மொழியப்பட்ட திட்டத்தின்படி மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 விழுக்காடு உயர்த்தப்படும்போது, மாநிலங்களவையின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக எந்தத் தெளிவான அறிவிப்பும் ஒன்றிய அரசின் சட்டமுன்வடிவில் இல்லை.
தற்போதைய மக்களவையின் 543 உறுப்பினர்களுடன் மாநிலங்களவையின் 245 உறுப்பினர்களையும் சேர்த்தால் மொத்தம் 788 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் மாநிலங்களவையின் பங்கு 31.09 விழுக்காடு.
மக்களவை உறுப்பினர்கள் 816 ஆக உயர்த்தப்பட்டு மாநிலங்களவை 245 உறுப்பினர்களாகவே தொடர்ந்தால், இரு அவைகளின் கூட்டுப் பலத்தில் மாநிலங்களவையின் பங்கு 23.09 விழுக்காடாகக் குறையும்.
இது மாநிலங்களவையின் வாக்குப் பங்கில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும்.
சாதாரண மசோதாக்கள் தொடர்பாக இரு அவைகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அரசமைப்புச் சட்டத்தின் 108ஆவது பிரிவின்படி கூட்டுக் கூட்டம் நடத்தப்படும் சூழலில், மக்களவையின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மாநிலங்களவையின் ஒப்பீட்டளவிலான வாக்குப் பலம் குறையும்.
அரசமைப்புத் திருத்த மசோதாக்கள் கூட்டுக் கூட்டத்தின் மூலம் நிறைவேற்றப்படுவதில்லை என்றாலும் சாதாரண சட்டமியற்றும் நடவடிக்கைகளில் மாநிலங்களவையின் பங்கு குறைவது கூட்டாட்சித் தத்துவம் தொடர்பான கவலையை இந்த நிர்வாக குழு பதிவு செய்கிறது.
மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதாகக் கூறும் மசோதா, மாநிலங்களின் குரலாகத் திகழும் மாநிலங்களவையின் பங்கையும் பாதுகாக்க வேண்டாமா?
இந்த மசோதாவை ஆதரிப்பதற்கு முன்பாக, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் வெற்றிபெற்ற மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதம் எந்தச் சூழலிலும் பாதிக்கப்படாது என்பதற்கான தெளிவான அரசமைப்புச் சட்ட உத்தரவாதத்தை திமுக கோர வேண்டும். அதோடு, குரியன் ஜோசப் குழுவின் பரிந்துரைகளையும் ஒன்றிய அரசு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.
இத்தகைய உத்தரவாதங்கள் இல்லாமல் மசோதாவை ஆதரிப்பது, பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் பெரும்பான்மைவாத அரசியல் அணுகுமுறைக்கு வலுசேர்ப்பதாகவும், மாநிலங்களின் குரலைப் பலவீனப்படுத்தக்கூடிய அரசியல் ஏற்பாட்டுக்குத் துணைபோவதாகவும் அமையும் என்ற கவலையைப் இந்நிர்வாக குழு வெளிப்படுத்துகின்றது.
மாநில சுயாட்சியை உண்மையாகப் பாதுகாக்க விரும்பும் திமுக, குரியன் ஜோசப் ஆணையத்தின் பரிந்துரைகளை வலியுறுத்தி, அவற்றுக்கான அரசமைப்புச் சட்ட உத்தரவாதங்கள் கிடைக்கும் வரை தொகுதி மறுவரையறை மசோதாக்களுக்கு ஆதரவளிப்பதிலிருந்து விலகி நிற்க வேண்டும் என்று இந்நிர்வாக குழு கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.