சென்னை,
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தனது முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி இந்தியா கூட்டணி தலைவர்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுவதற்காக சென்னை வந்தனர். ராகுல்காந்தி, சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ரேவந்த் ரெட்டி, டி.கே.சிவக்குமார், சதீசன், மம்தா பானர்ஜி ஆகிய முக்கிய அரசியல் தலைவர்கள் ஸ்டாலினின் இல்லத்துக்கு வருகை தந்தனர். அவர்களை மு.க.ஸ்டாலின் அன்புடன் வரவேற்றார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ள நிலையில், இந்தியா கூட்டணி தலைவர்கள் தாங்கள் வந்த வாகனத்திலேயே திரும்பிச் சென்றனர். அப்போது அவர்கள் இறுக்கமான முகத்துடன் காணப்பட்டனர்.
இந்த நிலையில், தொகுதி மறுவரையறை என்கிற நிலைப்பாட்டில் அதே உறுதியோடு இருப்பதாக திமுக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக ஐடி விங் பதிவிட்டு இருப்பதாவது;
1. முந்தைய தொகுதி மறுவரையறை மசோதாவின்படி, நம் எம்.பி. இடங்கள் 39-லிருந்து 31 அல்லது 32 ஆகக் குறையும் ஆபத்து இருந்தது. ஆனால் தற்போது திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவின் மூலம் நம் எம்.பி. இடங்கள் குறையாமல் 59 ஆக உயரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
2. முன்பு நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பங்கு 5.71%-5.89% சுருங்கும் நிலை இருந்தது. ஆனால் தற்போது தமிழ்நாட்டின் பங்கு 7.23% பாதுகாக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
3. முந்தைய மசோதாவால் 2027 கணக்கெடுப்பு வரையே பாதுகாப்பு இருந்தது. எளிதாக இடங்கள் குறையும் அபாயம் இருந்தது. ஆனால் திருத்தப்பட்ட மசோதாவினால் 2051 வரை பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 25 ஆண்டுகளுக்கு நம் இடங்கள் குறையாது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.