கோவை
தமிழக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனை அடுத்து, தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 15-ந்தேதி அறிவித்தது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்ட தேர்தலாக நடத்தி முடிக்கப்படும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளை முடித்து, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. நாளை மறுநாள் மாலையுடன் தமிழகத்தில் பிரசாரம் முடிவடைகிறது. இதனால், தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்து உள்ளது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும் போட்டியிடுகின்றன.
இவை தவிர, நாம் தமிழர் மற்றும் த.வெ.க. ஆகிய இரண்டு கட்சிகளும் தேர்தலை தனித்து எதிர்கொள்கின்றன. இதனால், தமிழக சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது. இதில், தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக இந்தியா கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி, கோவை, திருப்பூரில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் இணைந்து ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். இதேபோன்று, 20, 21 ஆகிய நாட்களில் ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முன்னாள் முதல்-மந்திரியான கெஜ்ரிவால் பிரசாரம் மேற்கொள்கிறார். மதசார்பற்ற முன்னேற்ற கூட்டணிக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்கின்றனர்.
இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, மத்திய மந்திரி பியூஷ் கோயல் உள்ளிட்டோர் ஏற்கனவே வாக்கு சேகரித்து சென்றனர். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் தமிழகத்தில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகத்தின் கோவை நகரில் ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவாக பேசினார்.
1996-ம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்த மசோதாவை தொடர்ந்து எதிர்த்து வந்தனர் என்றும், அவர்கள் சீர்திருத்தத்திற்கு எதிரான சக்திகள் என்றும் ஏறக்குறைய 3 தசாப்தங்களாக பெண்களுக்கான நீதியை தாமதப்படுத்தி உள்ளனர் என்றும் குற்றச்சாட்டாக கூறினார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, மக்களவை தொகுதிகளில் மகளிருக்கு பிரதிநிதித்துவம் அளிப்பது மற்றும் மகளிருக்கு 33 சதவீத ஒதுக்கீடு கிடைப்பதற்கான நடவடிக்கைகளை உறுதி செய்ய முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்றார்.
தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தென்னிந்தியாவை தவறாக வழிநடத்தி செல்கின்றனர் என அவர் கடுமையாக சாடினார். மக்களவை தொகுதிகளை 50 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் முடிவால், அனைத்து மாநிலங்களும் சம அளவில் பலனடையும் என குறிப்பிட்ட அவர், தென்னிந்தியா பிரதிநிதித்துவம் இழக்கும் என்ற பயம் தேவையற்றது என்று கூறினார்.
தென்னிந்தியாவில் தற்போதுள்ள 130 இடங்கள், 195 ஆக அதிகரிக்க கூடும் என்றும் தமிழகத்தின் எம்.பி. தொகுதிகள் 39-ல் இருந்து 59 ஆகவும், ஆந்திர பிரதேச எம்.பி. தொகுதிகள் 25-ல் இருந்து 38 ஆகவும் அதிகரிக்க கூடும் என்றும் விளக்கத்துடன் கூறினார்.