தமிழக செய்திகள்

தொகுதி மறுவரையறை விவகாரம்; முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி அத்வாலே பதில்

நாடாளுமன்றத்தில் எழுப்பலாம். அல்லது பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதலாம் என்று மத்திய மந்திரி அத்வாலே கூறியுள்ளார்.

சென்னை

நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் நாளை தொடங்கி 18-ந்தேதி வரையிலான 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த சிறப்பு கூட்டத்தொடரில், மகளிர் இடஒதுக்கீடு சீர்திருத்த மசோதா தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்படும் என்றும் அதில் 2 பெரிய சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள அரசு திட்டமிட்டு உள்ளது என்றும் தகவல் தெரிவிக்கின்றது.

இதேபோன்று, அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா-2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா-2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா-2026 ஆகிய 3 மசோதாக்களை மத்திய அரசு முன் மொழிந்து உள்ளது.

இந்த மசோதாக்கள் நாளை கூட உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன. இந்த மசோதாக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. எனினும், மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்து உள்ளனர்.

தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு சந்திக்கவுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் ஒன்றும் காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறையை எப்படி எதிர்கொள்வது? என்பது தொடர்பாக முக்கிய அறிவுறுத்தல்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். விவாதத்தில் பேச வேண்டிய எம்.பி.க்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே சென்னையில் இன்று பதிலளித்து பேசினார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, மு.க. ஸ்டாலின் கூறுவது தவறானது. தொகுதிகள் எண்ணிக்கை கூடவே செய்யும். குறையாது. தமிழகத்திற்கோ அல்லது தென்னிந்தியாவுக்கோ அநீதி இழைக்கப்படாது. தொகுதி மறுவரையறையானது விரிவாக்கத்திற்கானது. இதில் பாரபட்சம் இல்லை.

அப்படி அவர் தவறாக உள்ளது என ஏதேனும் உணர்கிறார் என்றால், அதனை நாடாளுமன்றத்தில் எழுப்பலாம். அல்லது பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதலாம். இதுபோன்ற தவறான விசயங்களை பரப்புவது என்பது பொதுமக்களை தவறாக வழிகாட்டும் செயலாகும் என்று கூறியுள்ளார்.