தமிழக செய்திகள்

சென்னையில் கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை: பெயிண்டர் கைது

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் எதிரே உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் உட்கார்ந்திருந்தபோது ஒரு கட்டிட தொழிலாளிக்கும், பெயிண்டருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

சென்னை,

கட்டிடத் தொழிலாளி:

திருவண்ணாமலை மாவட்டம் புலியூரை சேர்ந்தவர் தேவன் (வயது 45). இவர் சென்னை திருவல்லிக்கேணியில் தினமும் கட்டிட வேலை செய்வார். இரவில் பார்த்தசாரதி கோவில் வாசலில் படுத்து தூங்குவார். இதேபோல பூந்தமல்லியை சேர்ந்த பெயிண்டர் வேலை பார்க்கும் ரபீக்(25) என்ற வாலிபரும் பார்த்தசாரதி கோவில் வாசலில் இரவில் தூங்குவது வழக்கம். நேற்று இரவு 8 மணியளவில் இவர்கள் 2 பேரும் பார்த்தசாரதி கோவில் எதிரே உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் உட்கார்ந்து இருந்தனர். அப்போது தேவனிடம், ரபீக் தகராறு செய்துள்ளார்.

அடித்துக்கொலை:

இது தொடர்பாக நடந்த மோதலில் ரபீக், தேவனை செங்கலால் ஓங்கி தலையில் அடித்துள்ளார். தேவன் கூச்சல் போட்டபடியே ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்துள்ளார். தேவனை தாக்கி விட்டு தப்பி ஓடிய ரபீக்கை அங்கிருந்த ரோந்து போலீசார் விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். படுகாயம் அடைந்த தேவனை போலீசார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் தேவன் வழியிலேயே பரிதாபமாக இறந்து போனார். இதுபற்றி கொலை வழக்குப்பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீசார் ரபீக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.