தமிழக செய்திகள்

கட்டிட தொழிலாளி கட்டையால் அடித்து கொலை: நண்பர் வெறிச்செயல்

கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒருவர் உள்பட 4 பேர் தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, கட்டிட வேலை செய்து வந்தனர்.

தூத்துக்குடி,

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த மனோகரன் (வயது 55) மற்றும் புதுக்கடை பகுதியைச் சேர்ந்த சந்திரன்(55) உள்பட 4 பேர், தூத்துக்குடி கோரம்பள்ளம், அய்யனடைப்பு நடுத்தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, கட்டிட வேலை செய்து வந்தனர். நேற்று இரவு மேற்சொன்ன 4 பேரும் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

நள்ளிரவில் மனோகரன் மட்டும் அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்குள் சென்று உறங்கியுள்ளார். ஆத்திரத்தில் இருந்த சந்திரன், அங்கு சென்று தூங்கிக் கொண்டிருந்த மனோகரனை கட்டையால் கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இன்று காலை மற்ற 2 நண்பர்களும் எழுந்து பார்த்தபோது, மனோகரன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்கள் சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மனோகரனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தூத்துக்குடி ஊரக டி.எஸ்.பி சுதிர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் கட்டிட தொழிலாளியை அவரது நண்பரே அடித்துக் கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.