சென்னை,
வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் 2026–2027 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள மாநாட்டு கூட்டரங்கில், வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் 2026–2027 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் கலந்து கொண்டு, வேளாண் துறையின் முன்னேற்றம், விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாடு, நீர்வள மேலாண்மை, பாசன வசதிகள் விரிவாக்கம் மற்றும் நிலையான வேளாண் வளர்ச்சிக்கான அரசின் திட்டங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றத்தில் பங்கேற்றார்.
இக்கூட்டத்திற்கு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் தலைமை வகிக்க, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன், கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி, கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன்ராஜா, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் செ.கமலி, வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.ரஞ்சித்குமார், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் முனைவர் வி.கே.ராஜீவ்,
வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் - வேளாண்மை–உழவர் நலத்துறை முனைவர் பொ.சங்கர், வேளாண்மை இயக்குநர் முனைவர் க.வீ.முரளிதரன், துறை சார்ந்த அதிகாரிகள், வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் நிபுணர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.