செங்கல்பட்டு,
செங்கல்பட்டைச் சேர்ந்தவர் சரிதா. இவர், கடந்த 21.09.2025 அன்று தனது செல்போனை தவறவிட்டார். மறுநாள் புதிய சிம் கார்டு கேட்டு மணி மார்க்கெட்டிங் ஏர்டெல் ஷோரூமை அணுகினார். சிம் கார்டு அவரது தந்தை காந்தி பெயரில் இருப்பதால் மாற்றிக் கொடுக்க ரூ.650 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அவர் 'ஜிபே' மூலம் பணம் செலுத்தினார்.
இதுகுறித்து ஏர்டெல் நிறுவனத்திடம் விசாரித்தபோது, 'டுப்ளிகேட்' சிம் கார்டுக்கு ரூ.50 மட்டுமே கட்டணம் என்றும், பெயர் மாற்றத்துக்கு கட்டணம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சரிதா, செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஆணையத்தின் தலைவர் காசிபாண்டியன், உறுப்பினர் ஜவகர் ஆகியோர், தொலைந்த சிம் கார்டுக்கு பதிலாக புதிய சிம் கார்டு வழங்க அதிக கட்டணம் வசூலித்த ரூ.600-ஐ, 24 சதவீத வட்டியுடன் திருப்பிச் செலுத்த உத்தரவிட்டனர்.
மேலும் மனஉளைச்சலுக்கு ரூ.25 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.15 ஆயிரம் என மொத்தம் ரூ.40 ஆயிரம் வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டனர்.