தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம்: பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு

மாவட்ட நிர்வாகமும், தூத்துக்குடி துறைமுக சபை நிர்வாகமும் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என கண்டெய்னர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் மதியழகன் தெரிவித்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளதால் துறைமுகத்திற்குள் லாரிகள் செல்லாததால் பல கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்

புதிய வாடகை ஒப்பந்தம், வாடகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் துறைமுகத்திற்குள் லாரிகள் செல்லாததால் பல கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

வாடகையை உயர்த்தி வழங்க வேண்டும்

புதிய வாடகை ஒப்பந்த அடிப்படையில் வாடகையை உயர்த்தி வழங்க வேண்டும். வெளியூர்களுக்கு லோடு ஏற்றிச் செல்லும்போது வாடகைத் தொகையில் 30 சதவீதம் முன்பணமாக வழங்கப்பட வேண்டும். வாடகை பில் சமர்ப்பித்த 15 நாட்களுக்குள் தொகை பட்டுவாடா செய்யப்பட வேண்டும். கண்டெய்னர் யார்டுகளுக்கு லாரிகள் வந்தவுடன் உடனடியாக சரக்குகளை இறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாமூல் வசூலிப்பதை தடுக்க வேண்டும்

CFS குடோன்களில் கண்டெய்னர் பெட்டிகளை ஏற்றவும் இறக்கவும் மாமூல் வசூலிப்பதைத் தடுக்க வேண்டும். தூத்துக்குடி துறைமுகத்திற்குள் நுழையும் லாரிகள், 2 மணி நேரத்திற்குள் 8 மற்றும் 9-வது கப்பல் தளங்களில் கண்டெய்னர்களை ஏற்றி/இறக்கி முடித்து வெளியேற வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

2 ஆயிரம் கண்டெய்னர் லாரிகள்

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், இன்று காலை முதல் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை இயக்காமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாதாரண நாட்களில் தினமும் சுமார் 2,000 கண்டெய்னர் லாரிகள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு சரக்குகளை ஏற்றி இறக்கச் சென்று வரும். ஆனால், இந்த வேலைநிறுத்தம் காரணமாக இன்று ஒரு லாரி கூட துறைமுகத்திற்குள் செல்லவில்லை.

பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு

இதன் காரணமாகத் துறைமுகத்தில் சரக்குக் கையாளும் பணிகள் முடங்கி, நாளொன்றுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலைநிறுத்தம்

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கண்டெய்னர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் மதியழகன் கூறுகையில், "எங்களது நியாயமான கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகமும், தூத்துக்குடி துறைமுக சபை நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை எங்களது காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும்" என்று தெரிவித்தார்.