திருச்சி,
திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மறைந்த இசையமைப்பாளர் தேவா என் மீது தனிப்பட்ட முறையில் மிகுந்த அன்பு செலுத்தியவர். ரஜினிகாந்தின் படங்கள் உள்பட பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள அவரது இறப்பு, கலைத்துறைக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திற்குமே பேரிழப்பாகும். தேவா குடும்பத்தினருக்கும். கலைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் உரிய கூட்டு முயற்சி எடுத்தால் மட்டுமே இந்த விலைவாசி உயர்வை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும். ஆட்சியாளர்கள் மீது மட்டுமே குற்றம் சுமத்துவது உள்நோக்கம் கொண்டது. தமிழக முதல்-அமைச்சரும், கர்நாடக முதல்-மந்திரியும் சந்தித்துப் பேசியுள்ளனர். நீர் பங்கீடு என்பது ஒரு நீண்ட காலத்திட்டம். தற்போது அணைகளில் போதிய நீர் இல்லை என்பதால், இந்த சந்திப்பை யாரும் தேவையற்ற முறையில் விமர்சிக்கக்கூடாது என்றார்.
தொடர்ந்து அவரிடம், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட உள்ளதாகவும், அவரை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீங்கள் களம் இறங்குவதாகவும் தகவல் பரவுகிறதே? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், நான் எந்த இடைத்தேர்தலிலும் நிற்கப் போவதில்லை என்பதை ஏற்கனவே தெளிவாகச் சொல்லிவிட்டேன். அந்த நிலைப்பாட்டில் நான் இப்போதும் உறுதியாக இருக்கிறேன். ஆனால், நான் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியி டுவதாகத் திட்டமிட்டு விஷமத்தனமான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இது முற்றிலும் தேவையில்லாதது. திட்டமிட்டு பரப்பப்படுகின்ற வதந்தி என்றார்.