சென்னை,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனைத்தொடர்ந்து கவர்னர் அர்லேகர் முன்னிலையில், முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்று கொண்டார். முதல்-அமைச்சர் விஜய்யுடன், புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் உள்பட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். இதன்பின்னர் அவர்களுக்கு இலாகாக்களும் ஒதுக்கப்பட்டன.
அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. அப்போது இதுபற்றி பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இனிமேல் இதுபோல நடக்காது என்று விளக்கமளித்தார். இந்த சூழலில், இரண்டாவது முறையாக த.வெ.க. அரசின் அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று நடந்தது. இதில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், மூன்றாவது பாடலாக ஒலிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தொடர்ந்து அவமரியாதை செய்யப்படுவதாக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “கவர்னர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டதை போலவே தமிழ்நாடு எல்லா வகையிலும் இனிமேல் பின்னுக்கு தள்ளப்படும் என்பதற்கு த.வெ.க. அமைச்சர்கள் பதவியேற்பு விழாவே சான்று.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தொடர் அவமதிப்பும் ஏற்பட்டுள்ளது. அத்துடன், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டதை தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதுடன், தமிழோடு விளையாடியவர்கள் யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை” என்று அவர் கூறினார்.