தமிழக செய்திகள்

தமிழகத்தில் தொடரும் வன்முறை சம்பவங்கள்.. - சசிகலா வேதனை

ஆட்சி மாறியும் காட்சிகள் மாறாமல் இருப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார்.

சென்னை,

அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

அரிவாள் வெட்டு

திருநெல்வேலி மாவட்டம் அபிஷேகபட்டி அருகே உள்ள சீதபற்பநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வெள்ளாளகுளம் கிராமத்தில் இரண்டு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் ஆறு நபர்களுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

பெண்கள் கொலை

அதேபோன்று, கடந்த மாதம் சென்னை கோயம்பேட்டில் உள்ள மதுபான பாரில் சிகெரெட் பிடித்தவர்களை வெளியே சென்று பிடிக்குமாறு கூறியதால் ஏற்பட்ட பிரச்சனையில் ஆட்டோ ஓட்டுனர் மீது கொடூரமாக தாக்குதல் நடத்திய வீடியோ தற்போது வெளியாகியிருப்பது மிகவும் அதிர்ச்சியயையும், வேதனையையும் அளிக்கிறது.

இந்த சம்பவம் ஏற்பட்ட சில நாட்களுக்கு பிறகு, இதே மதுபான பாரில் ஏற்பட்ட மற்றொரு பிரச்சனையில் இரண்டு பெண்கள் மீது வாகனத்தை ஏற்றி கொலையும் செய்யப்பட்டனர். தமிழக காவல்துறை மதுபான பாரில் ஏற்கனவே நடைபெற்ற ஆட்டோ ஓட்டுனர் தாக்குதலில் முன்னதாகவே உரிய நடவடிக்கை எடுத்து இருந்தால் இரண்டு பெண் பிள்ளைகளின் உயிர்கள் பறிபோயிருக்காது என்பதை மிகுந்த வேதனையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை..

மேலும், ஆளும் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மாநகராட்சி கட்டிடத்திற்கு வெளியில் மதுபோதையில் காவலரையே மிரட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது. இதுபோன்ற காட்சிகளை கடந்த திமுக ஆட்சியில் அதிகம் பார்த்து வந்த தமிழக மக்களுக்கு இன்றைக்கு ஆட்சி மாறியும் காட்சிகள் மாறாமல் இருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு, தொடர்ந்து நடைபெறுகின்ற சமூக விரோத செயல்களை தடுக்க தவறினால், மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதுடன், சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவது முற்றிலும் கடினமாகிவிடும். எனவே, தமிழ்நாட்டில் சட்ட விரோத செயல்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கஞ்சா உள்ளிட்ட போதை கலாச்சாரத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடினமான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.