தமிழக செய்திகள்

தொடர் மழை: 2 நாட்களில் 9 அடி உயர்ந்த சேர்வலாறு அணை

மழை குறைந்தாலும் தொடர் நீர்வரத்தால் சேர்வலாறு அணை நீர்மட்டம் 2 நாட்களில் 9 அடி உயர்ந்தது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென்று பலத்த மழை கொட்டியது. நேற்று மாஞ்சோலை, மணிமுத்தாறு பகுதியில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது.

இதனால் நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணை மற்றும் மணிமுத்தாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் வினாடிக்கு 1,000 கனஅடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்தது. இதனால் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மழை குறைந்ததால் ஆற்றில் வெள்ளம் தணிந்து பொதுமக்கள் குளிக்க தொடங்கினர்.

அதேநேரம் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து நீடிப்பதால் சேர்வலாறு அணை நீர்மட்டம் கடந்த 2 நாட்களில் 9 அடி உயர்ந்து 137 அடியை எட்டியுள்ளது. நேற்று காலை நிலவரப்படி மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 106 அடியாகவும், பாபநாசம் அணை நீர்மட்டம் 124 அடியாகவும் உள்ளது. பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. அணைக்கு வினாடிக்கு 380 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 

SCROLL FOR NEXT