தமிழக செய்திகள்

தொடர் மழை: அமராவதி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடியாக உயர்வு

அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

திருப்பூர்,

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அமராவதி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடியாக உயர்ந்தது.

அமராவதி அணை

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணை உள்ளது. இந்த அணைக்கு வனப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலம் மழைக் காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது. இதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 29 ஆயிரத்து 387 ஏக்கரும், புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 25 ஆயிரத்து 250 ஏக்கரும் என மொத்தம் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

இந்த நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. குறிப்பாக உடுமலை வனப்பகுதியில் சாரல் மழையும், அவ்வப்போது கனமழையும் கொட்டித்தீர்த்தது.

நீர்வரத்து அதிகரிப்பு

இதன் காரணமாக ஆறுகளில் கணிசமான அளவு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 495 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. நேற்று முன்தினம் காலை 42.26 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 47.15 அடியாக உயர்ந்தது. அதாவது ஒரே நாளில் 4.89 அடியாக அதிகரித்து உள்ளது.

இதே நிலை நீடித்தால் அணை விரைவில் அதன் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் வானம் மேகமூட்டமாக காணப்படுவதுடன் கனமழை பெய்வதற்கான சூழலும் நிலவுகிறது. அதைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைக்கு வரும் நீர்வரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

89 மில்லி மீட்டர் மழை பதிவு

கடந்த ஆண்டு இதே நாளில் அணையின் நீர்மட்டம் 77.27 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையில் 47.15 அடிக்கு தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2495 கன அடி தண்ணீர் வந்தது. நேற்றைய நிலவரப்படி அமராவதி அணை பகுதியில் 89 மில்லி மீட்டரும், திருமூர்த்தி அணை பகுதியில் 57 மில்லி மீட்டரும், நல்லாறு பகுதியில் 84 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது.

SCROLL FOR NEXT