தென்காசி,
தொடர் மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இது மேலும் வலுப்பெற்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக நாளை (திங்கட்கிழமை) உருவாகிறது.
இந்த புயல் தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆந்திர கடலோரப் பகுதிக்கு அருகில் 28-ந்தேதி (புதன்கிழமை) காலை கரையை கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனிடையே தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருந்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் மழை கொட்டி வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் மேலும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம். திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.