சென்னை,
மின் கணக்கீடு (மீட்டர் ரீடிங்) செய்யும் மதிப்பீட்டாளர் பிரிவில் காலிப்பணியிடங்கள் அதிகமாக இருப்பதால், ஓய்வு பெற்ற பணியாளர்கள் உள்ளிட்ட பிற நபர்களை கொண்டு மின்சார வாரியம் தற்போது பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக மதிப்பீடு செய்வது உள்ளிட்ட புகார்கள் நுகர்வோரிடம் இருந்து வந்துள்ளன.
இந்த நிலையில், உடனுக்குடன் துல்லியமாக மின் கணக்கீடு செய்வதை உறுதி செய்ய, ஒப்பந்த அடிப்படையில் நிறுவனங்கள் மூலம் பணியாளர்களை நியமிக்க உள்ளதாக மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. அவர்கள் செல்போன் செயலி, ஆப்டிகல் புரோப், புளூடூத் டிரான்ஸ்மிட்டர் ஆகியவற்றை பயன்படுத்தி மின் கணக்கீடு செய்ய வேண்டும். சென்னை மாநகராட்சியில் ஒருவர் நாளொன்றுக்கு 250 இணைப்புகளும், பிற மாநகராட்சிகளில் 220, நகராட்சிகளில் 200, பேரூராட்சிகளில் 180. கிராமப்புறங்களில் 110, மலைப்பகுதிகளில் 80 இணைப்புகளும் கணக்கீடு செய்ய வேண்டும்.
பணியாளர்களுக்கு இளங்கலை பட்டம் அல்லது டிப்ளமோ குறைந்தபட்ச தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடு ஆரம்பத்தில் 6 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும். தகுதியான நிறுவனங்களிடம் இருந்து விலைப்புள்ளிகள் கோரப்பட்டு, உரிய டெண்டர் நடைமுறைகள் பின்பற்றப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.