சென்னை,
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொடுத்த பொருளுக்கு பணம் கொடுக்காத டவுண் பஞ்சாயத்துகள் இயக்குநர் 2 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை ஐகோர்ட்டில், செங்கல்பட்டு மாவட்டம், கடப்பாக்கத்தைச் சேர்ந்த டி.ரமேஷ் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘‘இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு எலக்ட்ரிக்கல் மற்றும் ஹார்டுவேர் பொருட்களை வழங்கும் ஒப்பந்த பணி எடுத்துள்ளேன். 2025-2026-ம் ஆண்டுக்கான வருடாந்திர ஒப்பந்தப் பணி வழங்கவில்லை.
இந்த நிலையில், அவசர நிலைக்காக இந்த பேரூராட்சிக்கு தெரு விளக்கு, குடிநீர், பொதுசுகாதாரம் உள்ளிட்ட வசதிகளுக்காக பொருட்களை கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந்தேதி முதல் அக்டோபர் 16-ந்தேதி வரை வழங்கியுள்ளேன். இதற்காக சுமார் ரூ.17.68 லட்சம் தர வேண்டும். ஆனால், இதுவரை பேரூராட்சி செயல் அதிகாரி பணத்தை தரவில்லை. இதுகுறித்து டவுண் பஞ்சாயத்து இயக்குநர், உதவி இயக்குநர் உள்ளிட்டோரிடம் கோரிக்கை மனு அனுப்பியுள்ளேன். ஆனால், இதுவரை எந்த பதிலும் வரவில்லை.
நான் ஒரு சிறு ஒப்பந்ததாரர். பேரூராட்சி தரவேண்டிய தொகையை வழங்காததால் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளேன். தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு தலையிட்டு பணத்தை வழங்கும்படி அதிகாரிகளுக்கு தகுந்த உத்தரவை பிறப்பிக்கவேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் எம்.சத்தியன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து இந்த மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி டவுண் பஞ்சாயத்துகள் இயக்குநர், இடைக்கழிநாடு பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.