தமிழக செய்திகள்

பிளஸ்-2 முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேருவதை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை தொடக்கம்

உயர்கல்வியில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு தேவையான சான்றிதழ்கள் உடனுக்குடன் கிடைக்கவும் நடவடிக்கை எடுப்பார்கள்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 8,914 மாணவர்கள், 9,600 மாணவிகள் என மொத்தம் 18,514 பேர் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வை எழுதினார்கள். இவர்களில் 8,143 மாணவர்கள், 9,166 மாணவிகள் என மொத்தம் 17,309 பேர் தேர்ச்சி பெற்றனர். தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளும் கல்லூரிகளில் சேர்ந்து உயர்கல்வி கற்பதை உறுதி செய்ய தமிழக அரசின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-2 முடித்த மாணவ, மாணவிகள் உயர் கல்வியில் சேருவதை உறுதி செய்வதற்காக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்காக கலெக்டர் மேற்பார்வையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் அரசு கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்கள், போலீஸ் அதிகாரிகள், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர், கல்வித்துறை ஆலோசகர்கள், உளவியல் ஆலோசகர்கள் இடம் பெற்றுள்ளனர்.

கல்வி கடனுதவி

இந்த குழுவினர் தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளில் உயர்கல்வியில் சேர விண்ணப்பிக்காமல் இருப்பவர்களை உரிய ஆய்வின் மூலம் கண்டறிந்து அவர்களை உயர் கல்வியில் சேர்ப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவார்கள். மாணவ- மாணவிகளுக்கு தேவையான உளவியல் ஆலோசனைகளை வழங்குவதுடன், வங்கிகள் மூலம் கல்வி கடன் உதவி பெற்று தரவும் இந்த அதிகாரிகள் குழுவினர் நடவடிக்கை எடுப்பார்கள்.

இதேபோல் உயர்கல்வியில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு தேவையான சான்றிதழ்கள் உடனுக்குடன் கிடைக்கவும் நடவடிக்கை எடுப்பார்கள். இதன் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-2 முடித்த அனைவரும் கல்லூரிகளில் சேர்ந்து உயர்கல்வி படிப்பதை உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.