சென்னை,
சைவ, வைண சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்துகள் தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கடந்த 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ,வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து பேசியது சர்ச்சையானது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டார்.
இந்த சர்ச்சை பேச்சு தொடர்பாக, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன், பொன்முடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், மத ரீதியாக வெறுப்புணர்வை தூண்டுதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பொன்முடியை தண்டிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொன்முடி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உத்தரவிட்டது.
தனக்கு எதிரான புகாரை விசாரணைக்கு ஏற்று ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், பொன்முடி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனது பேச்சுக்கு பொன்முடி பொதுவெளியில் மன்னிப்பு கேட்டுள்ளார். அவரது வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு வழக்கை திரும்ப பெற்று கொள்வதாக உமா ஆனந்தன் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து சர்ச்சை பேச்சு வழக்கில் இருந்து பொன்முடியை விடுவித்து, வழக்கு முடித்து வைக்கப்பட்டது.