தமிழக செய்திகள்

சர்ச்சை கருத்து: நயினார் நாகேந்திரனுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்

பெண்களைக் கண்ணியத்துடன் பேசுவதும், நடத்துவதுமே நாகரீக அரசியல் ஆகும் என்று தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று சேலத்தில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை கூட்டினார். 5 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் பேசிய விஜய், திமுக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்தார்.

இந்தநிலையில் த.வெ.க. தலைவர் விஜய்யின் பேச்சு குறித்து தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசியபோது சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார்.

இதன்படி விஜய் அரசியலில் அனுபவமற்றவர் என்றும், முதலில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும் ஒரு நடிகையின் பெயரை குறிப்பிட்டு, அவரிடம் இருந்து வெளியே வந்தால் தான் எல்லாமே நடக்கும் என்றும், குடும்பத்தோடு விஜய் நல் உறவு வைக்க வேண்டும் என்றும் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நடிகர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பெண் ஒருவரை இழுத்து அரசியல் விமர்சனம் செய்தது தகாதது என்ற விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இந்த சர்ச்சை கருத்துக்கு தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “இந்தியாவை ஆளும் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர், அரசியல் கருத்துகளைச் சொல்லும்போது பொதுவெளியில் பயணிக்கும் பெண்ணைப் பற்றி அவதூறாகப் பேசுவது அழகல்ல. பெண்களைக் கண்ணியத்துடன் பேசுவதும், நடத்துவதுமே நாகரீக அரசியல் ஆகும்” என்று தெரிவித்திருந்தார்.