தஞ்சாவூர்,
தஞ்சாவூரில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
தஞ்சாவூரில் கடந்த 3-ம் தேதி நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உதயநிதி மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த தஞ்சாவூர் போலீசார், அவரை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, தவெக தேசிய செய்தித் தொடர்பாளர் செல்வகுமார், உதயநிதியின் பேச்சு தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகார் மனுவில், தெரிவித்த கருத்துக்கு உதயநிதியிடம் விளக்கம் கேட்கவும், நிபந்தனையற்ற மன்னிப்பு கோர உத்தரவிடவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும், உதயநிதி மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.