சென்னை,
சென்னையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பொன்முடி பங்கேற்று பேசினார். அப்போது, சைவம், வைணவத்துடன் பெண்களை தொடர்புப்படுத்தி சில கருத்துக்களை தெரிவித்தார்.
இதையடுத்து பொன்முடி மீது பா.ஜனதா, சென்னை பெருநகர மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன், சைதாப்பேட்டை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சைதாப் பேட்டை கோர்ட்டில் இருந்து, ஜார்ஜ் டவுண் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி பொன்முடிக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டார். இந்தநிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி பொன்முடி தாக்கல் செய்த வழக்கு ஐகோர்ட்டு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, "பொன்முடிக்கு எதிரான புகார் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பு அரசிடம் அனுமதி பெறவேண்டும் என்று எங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் கீழ் கோர்ட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது" என்று வாதிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஜார்ஜ் டவுண் கோர்ட்டில் பொன்முடிக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும், விசாரணைக்கு நேரில் ஆஜராக பொன்முடிக்கு விலக்கு அளித்தும் உத்தரவிட்டார்.