தமிழக செய்திகள்

ஜல்லிக்கட்டு குறித்து சர்ச்சை பேச்சு: தவெக அரசை கண்டித்து செப்.3-ல் மதுரையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

த.வெ.க-வினர் இதுபோன்று தான்தோன்றித்தனமாக பேசி வருவது கடும் கண்டனத்திற்குரியது.

சென்னை,

தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் 'ஜல்லிக்கட்டு போட்டி இளைஞர்களை சீரழிக்கிறது" என்று அநாகரீகமாக கொச்சைப்படுத்திப் பேசி இருக்கின்ற சோழவந்தான் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரையும், த.வெ.க அரசையும் கண்டித்து. ஒருங்கிணைந்த மதுரை மாவட்டக் கழகங்களின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செப்லம்பர் 3-ந் தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கடும் கண்டனம்

சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்துவிட்டு ஆட்சியில் அமர்ந்த ரீல்ஸ் மாடல் தவெக. அரசு, மக்கள் நிம்மதியுடன் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தருவதற்கு பதிலாக பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகிறது. இதனை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். அந்த வகையில், தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில், சோழவந்தான் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா அவர்கள், தமிழர்களுடைய பாரம்பரியத்தின், கலாசாரத்தின், நாகரீகத்தின், வீரத்தின் அடையாளமான ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுப் போட்டி இளைஞர்களை சீரழிக்கிறது என்று அநாகரீகமாக, கொச்சைப்படுத்திப் பேசியிருப்பது இளைஞர்களிடையேயும், பொதுமக்களிடையேயும் மிகுந்த கொந்தளிப்பையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது. தவெ.க-வினர் இதுபோன்று தான்தோன்றித்தனமாக பேசி வருவது கடும் கண்டனத்திற்குரியது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகள்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையிலான அரசியல் மற்றும் சட்டப் போராட்ட வரலாறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், உச்சநீதிமன்றம் 2014ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முற்றிலுமாகத் தடை விதித்தது. அப்போதைய முதலமைச்சர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தோடு கலந்தது என்பதால் இந்தத் தடையை நீக்க வேண்டும் என மத்திய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததோடு, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார். தொடர்ந்து, 2017 ஜனவரியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்களும் மாணவர்களும் வாலாற்றுச் சிறப்பு மிக்க அறப் போராட்டத்தை நடத்தினர். அப்போதைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசின் ஒப்புதலுடன் 21.1.2017 அன்று ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன்மூலம் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மீண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

கலாசார பாரம்பரியம்

அவசரச் சட்டத்தைத் தொடர்ந்து. எனது தலைமையிலான அப்போதைய அம்மா அரசு தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் விலங்கு வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு நிரந்தர சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் ஐல்லிக்கட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது தமிழர்களின் கலாசார பாரம்பரியம் என சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது. 2017-ஆம் ஆண்டு கழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து விலங்கு அமைப்புகள் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், 18.5.2023 அன்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, தமிழக அரசு கொண்டுவந்த சட்டம் செல்லும் என்றும், ஜல்லிக்கட்டு தடையின்றி நடக்கலாம் என்றும் இறுதித் தீர்ப்பு அளித்தது. இவ்வாறு ஐல்லிக்கட்டுப் போட்டி தடையின்றி நடைபெறுவதற்கு கழக அரசு மேற்கொண்ட சட்டப் போராட்டங்களே காரணம் என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு கட்டிக்காட்ட விரும்புகிறேன்.

கண்டன ஆர்ப்பாட்டம்

இந்நிலையில், 'தமிழர்களின் வீர விளையாட்டான பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி, இளைஞர்களை அழிக்கிறது என்று தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் அநாகரீகமாக, கொச்சைப்படுத்திப் பேசிய சோழவந்தான் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரையும். மக்களின் நலனில் அக்கறையில்லாமல் தான்தோன்றித் தனமாக செயல்பட்டு வரும் ரீல்ஸ் மாடல் தவெக அரசையும் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்டக் கழகங்களின் சார்பில் 3.9.2026 வியாழக் கிழமை காலை 9.30 மணியளவில் 'அலங்காநல்லூர் வாடிவாசல் அருகில்' மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் கழக அமைப்புச் செயலாளரும் மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமானசெல்லூர் K ராஜூ கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும். மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான R.B. உதயகுமார், அழக அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான V.V. ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் மாணிக்கம் Ex M.LA, அவர்கள் முன்னிலையில் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள். முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி பகுதிக் கழகச் செயலாளர்கள். நிர்வாகிகள் கழக சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள் சார்பு அமைப்புகளின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் உட்பட மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும் கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஐல்லிக்கட்டு காளைபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், ஐல்லிக்கட்டு நலச் சங்கத்தினர் மற்றும் இளைஞர்கள், இளம் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுளது அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.