நாகப்பட்டினம்,
வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் தினமும் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். கடந்த 23-ந்தேதி மாலை குடந்தை ஆயர் ஜீவானந்தம் தலைமையில் நடந்த திருப்பலியில், நம்பிக்கையாளர்கள் மன்றாட்டு பகுதியில் முதல் மன்றாட்டை படித்த சிறுவன் திருத்தந்தை 14-ம் லியோ என்று கூறுவதற்கு பதில், 14-ம் விஜய் என்று கூறியது அனைவருக்கும் அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருந்தது. பேராலய பணியாளர்களால் நன்கு பயிற்சி பெற்ற பின்னரும் அந்த சிறுவன் அவ்வாறு கூறியது மனதிற்கு நெருடலாகவே இருந்தது.
இதுகுறித்து விசாரித்தபோது பதற்றத்துடன் வாசக மேடையை ஏறியதாகவும், சரியாக திருத்தந்தை 14-ம் என்று படித்துவிட்டு ஆரம்பித்ததாகவும், பதற்றத்தில் விஜய் என்று கூறி விட்டதாகவும் கூறினான். சிறுவன் கூறியது உண்மை. எனவே பேராலயத்தின் சார்பாக இனி இதுபோல் நடக்காதவண்ணம் பார்த்துக்கொள்ள ஆவண செய்கிறோம்.
பலரும் பலவிதமான கருத்துகளையும், ஆலோசனைகளையும் கூறினார்கள். அனைவருக்கும் எங்களது நன்றி. இனி ஒருபோதும் வழிபாட்டில் தவறுகள் நடைபெறாது என்று பேராலயத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.