தமிழக செய்திகள்

சேலம் அருகே அரசு பள்ளியில் வடமாநில ஆசிரியர்கள் நியமனத்தால் சர்ச்சை

மாதிரிப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

சேலம்,

சேலம் அருகே அரசு மாதிரிப்பள்ளியில் வடமாநில ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அரசு மாதிரிப்பள்ளி

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சிக்கனம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பூரில் அரசு மாதிரிப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 6 முதல் பிளஸ்-2 வரை விடுதி வசதியுடன் செயல்படும் இந்த மாதிரிப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

குறிப்பாக பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நீட், ஜெ.இ.இ. மற்றும் பிற தேசிய அளவிலான நுழைவு தேர்வுக ளுக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் இந்த பள்ளியில் மாணவ, மாணவிகளை சேர்க்க பெற்றோர் அதிக மாக ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீபத்தில் நடந்த நீட் மறு தேர்வில் குப்பூர் அரசு மாதிரிப்பள்ளியில் படித்த 5 மாணவ, மாணவிகள் 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

வடமாநில ஆசிரியர்கள் நியமனம்

இந்த நிலையில், குப்பூர் அரசு மாதிரிப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நீட், ஜெ.இ.இ. நுழைவு தேர்வு அளிப்பதற்காக தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர்களை தவிர வட மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் சில மாநிலங்களை சேர்ந்த 5 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமிழ் மொழி தெரியாத இந்தி தெரிந்த ஆசிரியர்களை வைத்து தமிழக மாணவர்களுக்கு எப்படி பாடம் கற்பித்து கொடுக்க முடியும்? என்றும், இதனால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் உளவியல் ரீதியாக மிகவும் பாதிப்பு அடைந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விசாரணை

இதுகுறித்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பனிடம் கேட்டபோது, 'குப்பூரில் உள்ள அரசு மாதிரிப்பள்ளியில் வெளிமாநிலத்தை சேர்ந்த ஆசிரியர்கள் நியமனம் செய்திருப்பது தொடர்பாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலமுருகனிடம் விசாரித்து வருகிறோம். அவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு மூலம் சம்பளம் வழங்கப்படுகிறதா? என்பது தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது' என்றார்.

சேலத்தில் அரசு மாதிரிப்பள்ளியில் வடமாநிலத்தை சேர்ந்த ஆசிரியர்களை நியமனம் செய்திருப்பது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கண்டன பதிவு வைரலாகி வருகிறது.