தமிழக செய்திகள்

17 வயது சிறுமியை கடத்தி பாலியல் தாக்குதல் செய்த குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒருவர், 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவரை கடத்தி சென்று பாலியல் தாக்குதல் செய்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு, சுமேஷ் (வயது 33) என்பவர், 17 வயதுடைய சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவரை கடத்தி சென்று பாலியல் தாக்குதல் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் போக்சோ ஈட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய முந்தைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜென்சி புலன் விசாரணை மேற்கொண்டு, சுமேஷை கைது செய்தார். புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து வழக்கின் விசாரணையானது திருநெல்வேலி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் சுமேசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி ராமலிங்கம் நேற்று குற்றவாளிக்கு தண்டனை வழங்கினார்.

தண்டனை விபரம் பின்வருமாறு:

6 of POCSO Act-ன்படி 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம், IPC 366-ன்படி 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த நீதிபதி, மேற்சொன்ன தண்டனைகளை குற்றவாளி தொடர்ச்சியாக (consecutive) அனுபவிக்க வேண்டும் என தனது தீர்ப்பில் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் தனது தீர்ப்பில் உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையினை, சிறப்பாக கண்காணிப்பு செய்த ஏ.டி.எஸ்.பி. சண்முகம் (CWC), சேரன்மகாதேவி உட்கோட்ட டி.எஸ்.பி. அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ், சேரன்மகாதேவி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய சேரன்மகாதேவி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜென்சி (தற்போது கன்னியாகுமரி மாவட்டம்), வழக்கின் விசாரணைக்கு உதவி செய்த பெண் தலைமை காவலர் ஜோதி மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் ஜெயபிரபா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிராண்ணகுமார் பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 4 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 4 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில் ஒரு குற்றவாளிக்கு மரண தண்டனையும், 1 குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், 1 குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.