தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் அனைத்து காவல் நிலையங்களில் வழக்குகளில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து உட்கோட்ட டி.எஸ்.பி.க்களுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி கடந்த 1997-ம் ஆண்டு முத்தையாபுரம் பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட திருநெல்வேலியைச் சேர்ந்த சேகர் (வயது 54) என்பவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததையடுத்து கடந்த 2001-ம் ஆண்டு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-II, அந்த குற்றவாளிக்கு பிடியாணை பிறப்பித்தது.
இதனையடுத்து தலைமறைவான சேகரை போலீசார் தேடி வந்த நிலையில் தூத்துக்குடி நகர உட்கோட்ட டி.எஸ்.பி. சுனில் மேற்பார்வையில் முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ்ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசன் மற்றும் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளியை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேற்சொன்ன பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளியை கைது செய்த காவல்துறையினரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.