தமிழக செய்திகள்

முதல்-அமைச்சராக பதவியேற்கும் விஜய்க்கு கான்வாய் பாதுகாப்பு

இன்று மினி கான்வாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், நாளை முதல் முழு கான்வாய் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிலான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை தேவைப்பட்டதால், அக்கட்சி ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது.

இதையடுத்து, பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில் த.வெ.க. ஈடுபட்டது. த.வெ.க.வின் அழைப்பை ஏற்று, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக அறிவித்தன.

தொடர்ந்து, நீண்ட இழுபறிக்கு பிறகு இன்று வி.சி.க. மற்றும் ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகள் த.வெ.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்தன. இதன் மூலம் த.வெ.க. ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை கிடைத்ததை தொடர்ந்து, த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளின் தலைவர்களுடன் கவர்னரை சந்தித்த விஜய், தமிழகத்தில் த.வெ.க. ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

மேலும், த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளின் கடிதங்களை கவர்னரிடம் த.வெ.க. தலைவர் விஜய் வழங்கினார். அந்த கடிதத்தை ஏற்றுக்கொண்ட கவர்னர், த.வெ.க. தலைமையிலான அரசு நாளை பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, நாளை காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ளார்.

முன்னதாக தேர்தல் முடிவுகள் வெளியான தினத்தில் இருந்து, த.வெ.க. தலைவர் விஜய்க்கு முதல்-அமைச்சருக்கான கான்வாய் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால், த.வெ.க. ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்த நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்ட கான்வாய் பாதுகாப்பு கடந்த 6-ந்தேதி திரும்ப பெறப்பட்டது.

பட்டினப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்திற்காக விஜய் சென்றிருந்தபோது அவருடன் சென்ற பாதுகாப்பு வாகனங்கள், அவர் திரும்பி வரும்போது அவருடன் வரவில்லை. காவல்துறை வாகனங்கள் மட்டுமே விஜய்யுடன் பாதுகாப்பிற்கு சென்றன.

இந்த நிலையில், நாளைய தினம் தமிழக முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்க உள்ளதையடுத்து, தற்போது விஜய்க்கு மீண்டும் முதல்-அமைச்சருக்கான கான்வாய் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எந்த இடத்தில் இருந்து கான்வாய் பாதுகாப்பு விலக்கப்பட்டதோ, அதே இடத்தில் இருந்து மீண்டும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கவர்னரை சந்தித்த பிறகு கான்வாய் பாதுகாப்புடன் த.வெ.க. தலைவர் விஜய் பட்டினப்பாக்கம் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

மேலும், இன்று மினி கான்வாய் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், நாளை பதவியேற்பு விழா நடந்த பிறகு விஜய்க்கு முதல்-அமைச்சருக்கான முழு கான்வாய் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.