திருச்சி,
திருச்சி பாலக்கரை ரெட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோசப் இருதயராஜ். இவரது மகன் ஆலன். இவரது திருமணம் நேற்று நடைபெற்றது. இந்த திருமணத்துக்காக கடந்த 23-ந்தேதி ஆலனின் குடும்பத்தினர் கடைக்கு சென்று ஜவுளி, நகை உள்ளிட்ட பொருட்களை வாங்கினார்கள். வீட்டுக்கு வந்ததும், அவற்றை பீரோவில் வைத்துபூட்டி, சாவியை அதன் அருகிலேயே வைத்துள்ளனர். பின்னர், அனைவரும் அமர்ந்து பேசிவிட்டு 24-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு தூங்க சென்றனர். மறுநாள் காலை எழுந்து பார்த்த போது பீரோவில் இருந்த 22½ பவுன் நகைகளை காணவில்லை. யாரோ மர்மநபர் அருகில் இருந்த சாவியை எடுத்து பீரோவில் இருந்த நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஜோசப் இருதயராஜ் பாலக்கரை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசில்பிரேம் ஆனந்த் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், திருமண வீட்டுக்கு சமையல் வேலைக்கு வந்த ராமநாதபுரம் மாவட்டம் காட்டு பரமக்குடி தாலுகா முல்லைநகரை சேர்ந்த உசேன் (வயது 45) என்பவர் தான் ஆலன் வீட்டில் நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது.
அவருடைய செல்போன் எண்ணை வைத்து கண்காணித்த போது அவர் நெல்லையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசில் பிரேம் ஆனந்த் தலைமையில் போலீஸ் ஏட்டுக்கள் விஜயகுமார், செல்வம், முகமது உசேன் மற்றும் போலீஸ்காரர் தேவேந்திரன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் நெல்லைக்கு விரைந்து சென்று உசேனை கைது செய்து நேற்று திருச்சிக்கு அழைத்து வந்தனர். மேலும் அவரிடம் இருந்து 22½ பவுன் நகைகளும் மீட்கப்பட்டது. பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட உசேன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.