தமிழக செய்திகள்

சமையல் எரிவாயு சிலிண்டர் பிரச்சினை: பிரதமருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

உணவகங்களுக்கு தேவையான அனைத்து மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம் செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முருகானந்தம், உணவு மற்றும் கூட்டுறவுத் துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதனிடையே கையிருப்பிலுள்ள சிலிண்டர்கள் விவரம் குறித்து இன்று பிற்பகலுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் அறிவுறுத்தி இருந்தார்.

முன்னதாக தமிழ்நாட்டில் அடுத்த 20 நாட்களுக்கு தேவையான வீட்டு கியாஸ் சிலிண்டர் கையிருப்பு உள்ளது என்றும், வணிக சிலிண்டர் தேவை அதிகரிக்க தொடங்கிய நிலையில் தங்கு தடையின்றி சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும்படி நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் பிரச்சினை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

அமெரிக்கா - ஈரான் போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இன்று விரிவாக ஆய்வு செய்தேன். தற்போது பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பையும் அப்பகுதியில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மீனவர்களின் நலனையும் உறுதி செய்திடத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்திட வேண்டும் என்று பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

இந்தப் போரால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டினால் பொதுமக்களும் வணிக நிறுவனங்களும், தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, வணிக எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களுக்குத் தேவையான அனைத்து மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் என்றும், தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தைப் பெற்று வழங்கிட வேண்டுமென்றும் வலியுறுத்தி உள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.