தமிழக செய்திகள்

குன்னூர்: குடியிருப்பு பகுதியில் கருஞ்சிறுத்தை உலா

கருஞ்சிறுத்தை நடமாட்டத்தால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதி அதிக பரப்பளவில் உள்ளது. இதனால் வனவிலங்குகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் புலி உள்பட பல்வேறு வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால், அவை ஊருக்குள் புகும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக குன்னூர் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊரை சுற்றிய வனப்பகுதிக்குள் பதுங்கி இருந்து இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்து வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி செல்கின்றன.

கருஞ்சிறுத்தை உலா

இந்தநிலையில் குன்னூர் அருகே உள்ள கரிமரா அட்டி பகுதியில் கருஞ்சிறுத்தை ஒன்று நாயை வேட்டையாட இரவில் உலா வந்தது. இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. கருஞ்சிறுத்தை நடமாட்டத்தால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து மக்கள் கூறும்போது. ஏற்கனவே குன்னூர் பகுதியில் கரடி நடமாட்டம் பெரும் பிரச்சினையாக இருக்கும் நிலையில், தற்போது கருஞ்சிறுத்தையும் நடமாடி வருகிறது. வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி செல்வதால், குடியிருப்பு வாசிகள் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது. வளர்ப்பு பிராணிகள் கிடைக்காத சமயத்தில், மனிதர்களை தாக்கும் அபாயம் உள்ளது. வனத்துறையினர் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட்டு, கருஞ்சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT