தமிழக செய்திகள்

திருச்சியில் கூட்டுறவுத்துறை ஆலோசனைக் கூட்டம்... அமைச்சர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு

ரேஷன் பொருட்களில் எடையளவில் எவ்விதக் குறைபாடும் ஏற்படக் கூடாது.

திருச்சி,

திருச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், கூட்டுறவுத்துறை அமைச்சர் தலைமையில் இன்று (19.09.2026) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அலுவலர்களுடன் துறை சார்ந்த பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்த முக்கிய அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்கள்:

விவசாயிகளுக்கு கடன் வசதி:

பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் 2026-ன் கீழ், 100% முழுமையாகக் கடன் தள்ளுபடி பெற்ற 20,192 விவசாயிகளுக்கு பயிர்க்கடன்களை வழங்க நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவி:

'சிங்கப்பெண்கள் கடன் உதவித் திட்டம்' மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு உரிய காலத்தில் அதிக அளவில் கடன் உதவிகளை வழங்கி, அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

நியாயவிலைக் கடைகளில் ஆய்வு:

பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் ரேஷன் பொருட்களில் எடையளவில் எவ்விதக் குறைபாடும் ஏற்படக் கூடாது என்றும், விநியோக முறையைத் துல்லியமாகக் கண்காணிக்கவும் உத்தரவிட்டார்.

வணிக மேம்பாடு & உள்கட்டமைப்பு:

அமராவதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையத்தின் நிலை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய 'சுயசேவைப் பிரிவு' (Self-service section) ஒன்றைத் தொடங்குவதற்கும், பண்டகசாலையில் இயங்கி வரும் திருச்சிராப்பள்ளி கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்குப் புதிய கட்டிடம் கட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார்.

இவ்வாய்வுக் கூட்டத்தில், மண்டல இணைப்பதிவாளர் ஜெயராமன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் அரசு, அமராவதி நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை இணைப்பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் தனலெட்சுமி, லால்குடி துணைப்பதிவாளர் சாய்நந்தினி, முசிறி துணைப்பதிவாளர் குமார், துணைப்பதிவாளர் / பணியாளர் அலுவலர் பிரேமலதா, டான்பெட் துணைப்பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் ஹபிபுல்லா மற்றும் பாரத மிகுமின் ஊழியர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT