ஆர். பிரேம்குமார் 
தமிழக செய்திகள்

கூட்டுறவு சங்க மோசடி வழக்கு: தமிழகம், கேரளாவில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

கைது செய்யப்பட்ட ஆர். பிரேம்குமாரின் உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் என மொத்தம் 11 இடங்களில் இந்த அதிரடி சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சென்னை,

மல்டி ஸ்டேட் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 5000 கோடி நிதி மோசடி வழக்கு தொடர்பாக, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள 11 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நிதி மோசடி புகார்கள்

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு 'பாரத் லஜ்னா மல்டி ஸ்டேட் கோ-ஆபரேட்டிவ் சொசைட்டி' (பிஎல்எம்) செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு சங்கத்தில் பொதுமக்கள் முதலீடு செய்த 5000 கோடி ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

தலைவர் கைது

இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான இச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஆர். பிரேம்குமாரை, கடந்த மாதம் 29-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கேரள குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

அமலாக்கத்துறை களம் இறங்கியது ஏன்?

பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட வைப்புநிதி, சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. பிரேம்குமார் இந்த பணத்தை தனது சொந்தப் பயன்பாட்டிற்கும், தனது மனைவி மற்றும் உறவினர்களின் வங்கிக் கணக்குகளுக்கும் மாற்றியுள்ளார். மேலும், சங்கத்தின் சொத்துகளை முறைகேடாக அடமானம் வைத்தது, காஞ்சிபுரத்தில் மனைவியின் பெயரில் 500 ஏக்கர் நிலம் வாங்கியது போன்ற சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் கண்டறியப்பட்டதால் அமலாக்கத்துறை இதில் களம் இறங்கியது.

11 இடங்களில் தீவிர சோதனை

சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், கொச்சி அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) அதிகாலை முதல் சோதனையைத் தொடங்கினர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கத்தின் தலைமையகம், பிரேம்குமாரின் வீடு மற்றும் கோவை, கொச்சி, திருச்சூர், திருவனந்தபுரம், கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் உள்ள அவரது உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் என மொத்தம் 11 இடங்களில் இந்த அதிரடி சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT