சென்னை,
கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்காக ரூ.100 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் மற்றும் மேலாளர் (வடிவமைப்பு & உற்பத்தி) ஆகியோர்களின் தீபாவளி விற்பனை - 2026 தொடர்பான செயலாக்க ஆய்வுக் கூட்டம், கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம. விஜய் பாலாஜி தலைமையில் நேற்று (23.09.2026) பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை, எழும்பூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தீபாவளி விற்பனை - 2026 தொடர்பாக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் விற்பனை இலக்கு, மண்டலவாரியான விற்பனை முன்னேற்றம், விற்பனை நிலையங்களின் செயல்பாடுகள், வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தயாரிப்புகளை காட்சிப்படுத்துதல் மற்றும் விற்பனையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தீபாவளி விற்பனை இலக்காக ரூ.100 கோடி என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டது. மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய வடிவமைப்புகள் மற்றும் தரமான கைத்தறி துணிவகைகளை அறிமுகப்படுத்துதல், விற்பனை நிலையங்களில் போதுமான அளவு சரக்குகளை இருப்பில் வைத்திருத்தல், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குதல் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனையை அதிகரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மண்டலவாரியாக நிர்ணயிக்கப்பட்ட விற்பனை இலக்குகளை எய்திடவும், கைத்தறி நெசவாளர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு சிறந்த சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திடவும், விற்பனை நிலையங்கள் லாபகரமாக செயல்படவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் அறிவுரைகளை வழங்கினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.