தமிழ்நாடு அரசு 
தமிழக செய்திகள்

கூவம் ஆற்றை மறுசீரமைக்கும் திட்டம்: ஆலோசகரை நியமிக்க அரசு முடிவு- டெண்டர் வெளியீடு

தேர்ந்தெடுக்கப்படும் ஆலோசனை நிறுவனம், கூவம் ஆற்றின் முழுமையான சீரமைப்புக்கான வரைபடம் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கும்.

சென்னை,

சென்னை கூவம் ஆற்றை மறுசீரமைக்கும் திட்டத்திற்காக ஆலோசகரை நியமிக்க அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது.

டெண்சர் வெளியீடு

சென்னை கூவம் ஆற்றைச் சர்வதேசத் தரத்திற்கு இணையாக மறுசீரமைத்து மேம்படுத்தும் திட்டத்திற்கு, தகுதியான ஆலோசகரை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான உலகளாவிய டெண்டரைச் சென்னை நதிகள் மறுசீரமைப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

திட்டத்தின் நோக்கம்

சென்னையின் முக்கிய நீர்வழித்தடமான கூவம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்து, நீரின் தரத்தை உயர்த்தவும், ஆற்றங்கரையோரங்களைப் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அழகுபடுத்தவும் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து, உலக வங்கியின் உதவியுடன் இத்திட்டத்தை விரைவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆலோசகர் நியமனமும் பணிகளும்

இத்திட்டத்திற்கான ஒருங்கிணைந்த விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கும், திட்டச் செயலாக்க ஆலோசனை சேவைகளை வழங்குவதற்கும் தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்படும் ஆலோசனை நிறுவனம், கூவம் ஆற்றின் முழுமையான சீரமைப்புக்கான வரைபடம் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கும்.

மாதிரித் திட்டம் (3 கி.மீ. தூரம்)

முதற்கட்டமாக, கூவம் ஆற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 கிலோமீட்டர் நீளப் பகுதியை மாதிரித் திட்டமாக மறுசீரமைப்பதற்கான கருத்துத் திட்டம் மற்றும் செயல்திட்டத்தை ஆலோசகர் தயாரித்து வழங்குவார். இதனைத் தொடர்ந்து மற்ற பகுதிகளுக்கும் பணிகள் விரிவுபடுத்தப்பட உள்ளன.

பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு வசதிகள்

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த பகுதிகளில் ஆற்றங்கரையோரம் நவீன நடைபாதைகள், சைக்கிள் பாதைகள், ஆற்றின் அழகை ரசிப்பதற்கான பார்வையிடும் மேடைகள் மற்றும் பசுமைப் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்தல் மற்றும் நீரின் தரத்தை மேம்படுத்துதல் ஆகிய பணிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

வெள்ளத் தடுப்பு- படகுப் போக்குவரத்து

மேலும், மழைக்காலங்களில் வெள்ளநீரை முறையாக சேமிப்பது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மற்றும் கூவம் ஆற்றில் எதிர்காலத்தில் படகுப் போக்குவரத்தை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இந்த ஆலோசனைக் குழு விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.

SCROLL FOR NEXT