தமிழக செய்திகள்

விருகம்பாக்கம் கால்வாய், கூவம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

சென்னையில் பல்வேறு இடங்களை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து ஜி.எஸ்.சமீரன் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை,

சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ். சமீரன் இன்று சென்னையில் பல்வேறு இடங்களில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

இன்று (31.05.2026) பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், தியாகராய நகரில் அமையப்பெற்றுள்ள பன்னடுக்கு தானியங்கி வாகன நிறுத்தும் இடம், நமச்சிவாயபுரம் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில், விருகம்பாக்கம் கால்வாய் சேருமிடம், நெல்சன் மாணிக்கம் சாலைப் பகுதியில் விருகம்பாக்கம் கால்வாய் மற்றும் டிரஸ்ட்புரம் கால்வாய் சேருமிடம் ஆகியவற்றினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோடம்பாக்கம் மண்டலம், தியாகராய நகரில் அமையப்பெற்றுள்ள பன்னடுக்கு தானியங்கி வாகன நிறுத்தும் இடத்தினை மாநகராட்சி ஆணையாளர் பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தானியங்கி வாகன நிறுத்தும் இடம்

இந்த தானியங்கி வாகன நிறுத்தும் இடமானது, தரைத்தளம் மற்றும் ஏழு தளங்களும், தரைத்தளத்தின் கீழ் இரண்டு தளங்களும் அமையப் பெற்றுள்ளது. தரையின் கீழ் உள்ள இரண்டு தளங்களில் 282 இருசக்கர வாகனங்களும், தரைத்தளத்திற்கு மேல் உள்ள 7ஆவது தளத்தில் 231 இருசக்கர வாகனங்களும் என மொத்தம் 513 இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கும், தரைத்தளத்திற்கு மேல் உள்ள 6 தளங்களில் 222 நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்துவதற்கு வசதி உள்ளது. தற்போது இந்த வாகன நிறுத்துமிடத்தின் 4ஆவது தளத்தில் 37 நான்கு சக்கர வாகனங்களும், தரைத்தளத்தின் கீழ் 282 இரு சக்கர வாகனங்களும் எவ்வித கட்டணமும் இன்றி நிறுத்தப்பட்டு வருகிறது.

தற்போது இதற்கான ஒப்பந்தம் கோரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் ஒப்பந்த நடவடிக்கைகள் முடிவுற்ற பின்னர் உரிய கட்டணத்துடன் தரைத்தளத்திற்கு மேல் உள்ள 6 தளங்களில் நான்கு சக்கர வாகனங்களும், தரைத்தளத்திற்கு கீழ் உள்ள இரண்டு தளங்கள் மற்றும் 7ஆவது தளத்தில் இரண்டு சக்கர வாகனங்களும் நிறுத்துவதற்கு அனுமதிக்கப்படும்.

அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

இந்த தானியங்கி வாகனம் நிறுத்தும் இடத்தினை உரிய தொழில்நுட்பத்துடன் பராமரித்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், இப்பகுதியில் உள்ள சாலையில் வாகனங்கள் நிறுத்துவதை மக்கள் தவிர்த்திட வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-109, நமச்சிவாயபுரம் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில், விருகம்பாக்கம் கால்வாய் இணையும் இடத்தினை மாநகராட்சி ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அந்த இடத்தில் மழை வெள்ள நீர் இடையூறின்றி செல்லும் வகையில் அடைப்புகளை நீக்கி, தூர்வாரி பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

விரைந்து முடித்திட அறிவுறுத்தல்

பின்னர், நெல்சன் மாணிக்கம் சாலைப் பகுதியில், விருகம்பாக்கம் கால்வாய் மற்றும் டிரஸ்ட்புரம் கால்வாய் சேருமிடத்தைப் பார்வையிட்டு, அப்பகுதியில் தூர் வாருதல், வெள்ளத்தடுப்புச் சுவர் கட்டுதல் உள்ளிட்ட வெள்ளத்தடுப்புப் பணிகளை மேற்கொண்டு மழைக்காலத்திற்கு முன்னதாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக, நமச்சிவாயபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கிரிக்கெட் மற்றும் கைப்பந்து உள்விளையாட்டு அரங்கினைப் பார்வையிட்டு அதன் பயன்பாடு குறித்து மக்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின்போது, மாநகராட்சி சிறப்புத் திட்டங்கள் துறை செயற்பொறியாளர் சி.ராஜு, மண்டல அலுவலர் பானு குமார், மண்டல செயற்பொறியாளர்கள் முத்தையா, செந்தில் குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.