தமிழக செய்திகள்

கொடுங்கையூர் குப்பை கிடங்கில் மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு

திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன், கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் பயோமைனிங் தொழில்நுட்பத்தின் மூலம் திடக்கழிவுகள் அகற்றப்படும் திட்ட செயல்பாடுகளை இன்று (21.05.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தின் மொத்த பரப்பளவு சுமார் 342.91 ஏக்கர் ஆகும். கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தின் மொத்த பரப்பளவான 342.91 ஏக்கரில், சுமார் 252 ஏக்கர் நிலத்தில் திடக்கழிவுகள் நீண்டகாலமாக கொட்டப்பட்டு வந்துள்ளது.

இதில் உள்ள 66,52,506 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் ரூபாய் 640.83 கோடி மதிப்பீட்டில் அகற்றும் பணி ஆறு சிப்பங்களாக பிரிக்கப்பட்டு நிலத்தினை மீட்டெடுப்பதற்காக 3 ஒப்பந்ததாரர்கள் வாயிலாக பயோ மைனிங் தொழில்நுட்பத்தின் மூலம் அகழ்ந்தெடுத்து பிரித்தெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனைப் பார்வையிட்டு ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர், இந்த வளாகத்தில் திடக்கழிவுகள் அகற்றும் பணியினை உரிய காலத்திற்குள் மேற்கொண்டு நிலத்தினை மீட்டெடுக்க வேண்டும் எனவும், இப்பணிகளை தாமதமின்றி ஒப்பந்ததாரர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அலுவலர்கள் இதன் மீது தனிக் கவனம் மேற்கொண்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இதுவரை 37,57,529 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு 3 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த 3 ஏக்கர் நிலத்தில் 881 பசுமை நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதை மாநகராட்சி ஆணையர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை சிறப்பாக பராமரிக்கும்படி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது இணை ஆணையாளர் வீ.ப.ஜெயசீலன், வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.