தமிழக செய்திகள்

சென்னையில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஆய்வு

போதுமான அளவில் பூங்காவிற்கு தண்ணீர் வசதி ஏற்படுத்திட அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தினார்.

சென்னை,

சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலத்தில் மதனகுப்பம், கொரட்டூர் ஏரி, கொரட்டூர் இரயில்வே கால்வாய், ஒண்டிவீரன் நீர்வழிப்பாதை, சிட்கோ பகுதியில் மழைநீர் வடிகால் ஆகிய வெள்ளத்தடுப்புப் பணிகள் மற்றும் அத்திப்பட்டு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பு பகுதியில் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இன்று (02.06.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேம்பாட்டுப் பணிகள்

மாநகராட்சி ஆணையாளர், அம்பத்தூர் மண்டலம், வார்டு-83க்குட்பட்ட மதனகுப்பம் ஏரியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு மேம்பாட்டுப் பணிகள், படகு சவாரி மற்றும் பூங்காப் பகுதிகளை பார்வையிட்டு, பூங்காவில் பசுமை பரப்பளவினை அதிகரிக்கும் வகையில் மியாவாக்கி அடர்வனக் காடுகளை அமைக்கவும், போதுமான அளவில் பூங்காவிற்கு தண்ணீர் வசதி ஏற்படுத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, வார்டு-82 மற்றும் 83க்குட்பட்ட பகுதிகளில் உள்ள டி.டி.பி. காலனி அருகிலுள்ள கொரட்டூர் ஏரி, கொரட்டூர் இரயில்வே கால்வாய், ஒண்டி வீரன் கால்வாய் மற்றும் நீர்வழிப்பாதைகளைப் பார்வையிட்டு, ஆகாயத்தாமரைகளை அகற்றிடவும், நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரி பராமரித்திடவும், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.

மழைநீர் வடிகால் பணிகள்

பின்னர், நீர்வளத்துறை மூலமாக வார்டு-84 மற்றும் 85க்குட்பட்ட சிட்கோ 3வது பிரதான சாலை முதல் கூவம் வரை மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளைப் பார்வையிட்டு, பணிகளை துரிதமாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, வார்டு-86க்குட்பட்ட அத்திப்பட்டு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பு பகுதியில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கட்டப்பட்டுள்ள படிப்பகம், உடற்பயிற்சிக் கூடம், குடியிருப்பு சுவர்களில் வரையப்பட்டுள்ள வண்ண ஓவியங்கள், கால்பந்து மைதானம், இறகுப்பந்தாட்ட மைதானம் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, குடியிருப்பு வளாகங்களில் தூய்மைப் பணிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களை முறையாகப் பராமரித்திட மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின்போது, மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு.எச்.ஆர்.கௌஷிக், இ.ஆ.ப., மண்டல அலுவலர் திரு.பிரபாகர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறபட்டுள்ளது.